மகாராஷ்டித்தில் தற்போது நடந்துவரும் அரசியல் நாடகத்தில் பல்வேறு திருப்பங்கள் நிகழ்ந்துவருகின்றன. சிவசேனா கட்சி எம்எல்ஏ ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அக்கட்சி எம்எல்ஏ-க்கள் உத்தவ் தாக்கரே அரசுக்கு எதிராகக் கலகம் செய்து குஜராத்துக்கும் அங்கிருந்து அசாமுக்கும் சென்று தங்கிய நிலையில், அவர்களுடன் சென்றிருந்த பாலாப்பூர் தொகுதி எம்எல்ஏ நிதின் தேஷ்முக் தன்னைக் கடத்திவிட்டதாகவும் தான் தப்பிவந்துவிட்டதாகவும் கூறியிருக்கிறார்.
மகாராஷ்டிரத்தில் சிவசேனா பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க வேண்டும் என்று ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான 30-க்கும் மேற்பட்ட எம்எல்ஏ-க்கள் போர்க்கொடி தூக்கியிருக்கின்றனர். இதையடுத்து குஜராத்துக்குச் சென்று தங்கிய அவர்கள், பின்னர் அங்கிருந்து அசாம் தலைநகர் குவாஹாட்டிக்குச் சென்றனர்.
அவர்களுடன் நிதின் தேஷ்முக்கும் சென்றிருந்ததாகவும் அதிருப்திக் குழுவில் அவரும் சேர்ந்துவிட்டதாகவும் கருதப்பட்டது. இந்நிலையில், சூரத்தில் தங்கியிருந்த ஹோட்டலிலிருந்து வெளியில் வந்தபோது தான் கடத்தப்பட்டதாகப் பரபரப்பு தகவலைத் தெரிவித்திருக்கிறார் நிதின் தேஷ்முக்.
“குஜராத்தின் சூரத் நகரில் அதிகாலை 3 மணி அளவில் நான் தப்பிவந்து சாலையில் நின்றுகொண்டிருந்தேன். அங்கிருந்து ஏதேனும் ஒரு வாகனத்தில் சென்றுவிடலாம் என்று நினைத்திருந்தேன். அப்போது நூற்றுக்கும் அதிகமான போலீஸார் அங்குவந்து என்னை ஒரு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். எனக்கு மாரடைப்பு ஏற்பட்டிருப்பதாகச் சித்தரித்த அவர்கள் எனக்கு சிகிச்சை அளிக்க முயன்றனர். ஆனால், கடவுள் அருளால் எனக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. கட்டாயப்படுத்தி என்னை மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர்” என்று நாக்பூரில் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார். முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு ஆதரவளிப்பதாகவும் அவர் விளக்கமளித்தார்.
அவர் குவாஹாட்டிக்குச் சென்றபோது அவருடன் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட அதிருப்திக் குழுவினர் இல்லை என்றும், அங்கிருந்து தனி விமானத்தில் அவர் நாக்பூர் திரும்பியதாகவும் சொல்லப்படுகிறது.
இதற்கிடையே நிதின் தேஷ்முக்கைக் காணவில்லை என காவல் நிலையத்தில் அவரது மனைவி பிராஞ்சலி புகார் அளித்திருந்தார். தனது கணவரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாகவும் அந்தப் புகாரில் அவர் தெரிவித்திருந்தார். ஜூன் 20-ம் தேதி காலை 7 மணிக்குத் தனது கணவருடன் செல்போனில் பேசிய பின்னர், அவரது செல்போன் அணைத்துவைக்கப்பட்டிருப்பதாகவும் அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் பிராஞ்சலி குறிப்பிட்டிருந்தார்.