ஆப்கானிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம்: 155 பேர் உயிரிழப்பு


கிழக்கு ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 155 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆப்கானிஸ்தானில் உள்ள பாக்டிகா மாகாணத்தில் ஏற்பட்ட 6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் குறித்த முழுமையான விவரங்கள் இன்னும் வெளிவரவில்லை. இந்த சம்பவம் குறித்து தலிபான் அரசாங்கத்தின் துணை செய்தித் தொடர்பாளர் பிலால் கரிமி வெளியிட்ட ட்வீட்டில், "பாக்டிகா மாகாணத்தின் நான்கு மாவட்டங்களில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது, இதில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். மேலும் இந்த நிலநடுக்கத்தால் நிறைய வீடுகள் அழிந்துள்ளன. மேலும் பேரழிவைத் தடுக்க உடனடியாக மீட்புக் குழுக்களை அனுப்புமாறு அனைத்து உதவி நிறுவனங்களையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

புதன்கிழமை அதிகாலை ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானின் சில பகுதிகளில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (யுஎஸ்ஜிஎஸ்) தெரிவித்துள்ளது. தென்கிழக்கு ஆப்கானிஸ்தானின் கடற்கரையில் இருந்து 44 கி.மீ தொலைவில் 51 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளதாக பாகிஸ்தானின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்திலும், கிழக்கு பஞ்சாப் மாகாணத்தின் பிற இடங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டது. இந்த பயங்கர பூகம்பத்தின் அதிர்வுகளை ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் இந்தியாவில் 119 மில்லியன் மக்கள் 500 கிலோமீட்டர் (310 மைல்) தொலைவு வரை உணர்ந்ததாக ஐரோப்பிய நிலநடுக்க ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

x