இந்தியாவின் குடியரசுத் தலைவர்: எதிர்பார்ப்புகளும் எதிர்பாராதவையும்!


இந்திய குடியரசுத் தலைவர் மக்களால் அல்ல - மக்களுடைய தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் - தேர்ந்தெடுக்கப்படுகிறவர். மறைமுகமான மக்கள் தேர்வு என்றும் கூறலாம். ஆனால் பிரதமருக்குரிய அதிகாரமும் செல்வாக்கும் குடியரசுத் தலைவருக்கு இல்லை. அதற்காக அவர் அதிகாரமற்றவர் என்றும் பொருள். அல்ல. மக்களவை பொதுத் தேர்தல் நடந்து எந்தக் கட்சிக்கும் அல்லது கூட்டணிக்கும் பெரும்பான்மை வலு கிடைக்காவிட்டால் தேச நாயகரே குடியரசுத் தலைவர்தான். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு பதவிக்கு வந்த பிறகுதான் அவர் ஓரமாக உட்கார்ந்து நடப்பதைக் கவனிக்க வேண்டியவராகிறார்.

குடியரசுத் தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறவர்கள் தங்களுடைய அரசியல் அறிவு, கல்வி ஞானம், அனுபவம் ஆகியவற்றால் அந்தப் பதவிக்குப் பெருமை சேர்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஒரு சிலர் மட்டுமே குடியரசுத் தலைவரான பிறகும் கட்சிக்கோ, தங்களைத் தேர்வு செய்தவருக்கோ விசுவாசத்தைக் காட்டி அந்தப் பதவிக்குரிய மேன்மையைச் சற்றே குறைத்துவிடுகின்றனர். ஆயிரம் சொன்னாலும் 'ராஷ்டிரபதி' என்ற பெயருக்கேற்ப அவர் இந்த நாட்டுக்கே பதியாகத்தான் இருக்கிறார்.

நாடாளுமன்ற, சட்டப் பேரவை உறுப்பினர்கள்

குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 18-ல் நடைபெறுகிறது. குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்க 776 நாடாளுமன்ற உறுப்பினர்களும், 4,809 சட்டப் பேரவை உறுப்பினர்களும் தகுதி படைத்தவர்கள். மக்களவையின் 543 உறுப்பினர்கள், மாநிலங்களவையின் 233 உறுப்பினர்களுக்கு வாக்குரிமை இருக்கிறது.

நாட்டின் முதலாவது குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் தொடங்கி, இப்போது பதவி வகிக்கும் ராம்நாத் கோவிந்த் வரையில் அனைவருமே தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்தான். 1977-ல் ஜனதா கட்சி பதவியில் இருந்தபோது நீலம் சஞ்சீவ ரெட்டி மட்டுமே ‘போட்டியே இல்லாமல்’ குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்கு முக்கியக் காரணம் அதற்கும் பத்தாண்டுகளுக்கு முன்னால் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சஞ்சீவ ரெட்டியை அதிகாரபூர்வ வேட்பாளராக அறிவித்துவிட்டு வி.வி. கிரியை சுயேச்சையாகப் போட்டியிட வைத்து காங்கிரஸ் கட்சியின் தன்னுடைய ஆதரவாளர்களையும் எதிர்க்கட்சியினர் சிலரின் ஆதரவையும் பெற்று தேர்தலில் வெற்றி பெற வைத்தார் பிரதமராகப் பதவி வகித்த இந்திரா காந்தி. இதை இந்திரா காந்தியின் துணிச்சலுக்கும் ராஜ தந்திரத்துக்கும் அடையாளமாக அவருடைய ஆதரவாளர்கள் புகழ்ந்தனர்.

குடியரசுத் தலைவராகப் பதவி வகித்த அனைவருமே ஒரே மாதிரியான குடும்பப் பின்னணியோ அரசியல் பின்னணியோ கொண்டவர்கள் அல்லர் என்பதே அதில் நாம் ஆர்வத்துடன் எதிர்நோக்கக் காரணமாக இருக்கிறது. அறிவு, நாணயம், நேர்மை, நடுநிலை ஆகியவை உள்ளவரைக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுப்பதைவிட, தேர்தலில் நிறுத்தும் கட்சி அல்லது கூட்டணிக்கு விசுவாசமாக நடப்பவரையே வேட்பாளராகத் தேர்வு செய்கிறார்கள். புரட்சிகரமாகவோ, மனசாட்சிப்படியோ நடந்துவிடக் கூடாது என்ற எதிர்பார்ப்பிலேயே குடியரசுத் தலைவர் வேட்பாளர் தேர்வு செய்யப்படுவது இப்போதைய வழக்கமாகிவிட்டது.

பெருமை சேர்த்தவர்கள்

ஆர்.வெங்கட்ராமன், டாக்டர் சங்கர் தயாள் சர்மா, கே.ஆர். நாராயணன் ஆகியோர் காங்கிரஸ் கட்சியால் நிறுத்தப்பட்ட வேட்பாளர்கள், தேர்தலில் வென்று குடியரசுத் தலைவரானவர்கள் என்றாலும் முக்கியமான தருணங்களில் அரசமைப்புச் சட்டத்துக்கு முக்கியத்துவம் தந்ததுடன் ஜனநாயக மரபுகளையும் இம்மி பிசகாமல் காத்து, நாட்டுக்குப் பெருமை சேர்த்தனர். அப்படியும் அவர்களுடைய செயல்பாடு காரணமாக பிற கட்சிகளில் - அவரவர் கட்சி நலன் சார்ந்து - அவர்கள் மீது அதிருப்தியும் கோபமும் இன்னமும்கூட தொடரக் கூடும்.

சங்கர் தயாள் சர்மா

வாஜ்பாய்க்கு வாய்ப்பு தந்த சர்மா

1996-ல் பாரதிய ஜனதா கட்சிக்குப் பெரும்பான்மை கிடைக்கவில்லை, ஆதரிக்க தோழமைக் கட்சிகள் எதுவும் அதிக எண்ணிக்கையில் முன்வரவில்லை என்ற போதும் அதிக இடங்களில் வென்ற கட்சி என்பதால், வாஜ்பாயைப் பிரதமர் பதவி வகிக்குமாறு அழைத்து வாய்ப்பு தந்தார் சங்கர் தயாள் சர்மா. 13 நாட்கள் பிரதமராக இருந்த பிறகும்கூட எதிர்க்கட்சிகளை வளைக்கத் தெரியாமல் தனது தோல்வியை ஒப்புக்கொண்டு பதவி விலகினார் வாஜ்பாய். பிறகு மீண்டும் அதே போல தனிப்பெரும் கட்சியாக அடுத்த தேர்தலில் வென்று அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் பிரதமராக 13 மாதங்கள் ஆண்டார் வாஜ்பாய். அந்த ஆட்சியும் ஜெயலலிதா ஆதரவை விலக்கிக்கொண்டதால் கவிழ்ந்து அடுத்த தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்து ஐந்தாண்டுகள் பதவி வகித்தார் வாஜ்பாய்.

பிரதமர் - குடியரசுத் தலைவர் முரண்

1984-ல் பிரதமராகப் பதவி வகித்த இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினராகக் கூட இல்லாத ராஜீவ் காந்தியைப் பிரதமராகப் பதவியேற்க ஒத்துழைத்தார் அப்போதைய குடியரசுத் தலைவர் ஜைல் சிங். ராஜீவ் பிரதமரானதில் பிரணாப் முகர்ஜிக்கு மிகப் பெரிய வருத்தம் இருந்தது. பிறகு ஜைல் சிங்குக்கும் பிரதமர் ராஜீவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளும் அதை ஜைல்சிங் வெளிப்படையாக அறிவித்த விதமும், அவர் சுமத்திய குற்றச்சாட்டுகளும் அந்தப் பதவிக்குரிய பெருமையைப் பெரிதும் குலைத்தன.

இந்துமத சட்டத் தொகுப்பு தொடர்பாக முதல் பிரதமர் நேருஜிக்கும் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாதுக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்தன. அந்தக் கசப்பை வெளிப்படுத்த ராஜேந்திர பிரசாத் தயங்கவில்லை. இருந்தும் இருவரும் அவரவர் பதவிக்குரிய கண்ணியத்துடன் நடந்துகொண்டனர். சஞ்சீவ ரெட்டி குடியரசுத் தலைவராக இருந்தபோது 1980 தேர்தலில் மீண்டும் பிரதமரான இந்திரா காந்திக்கு அவருடனான பழைய கருத்து வேறுபாடுகள் தொடர்ந்தன.

அறிவு ஜீவியான பிரதமர் பி.வி. நரசிம்ம ராவுக்கும் குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மாவுக்கும்கூட உரசல்கள் ஏற்பட்டன. இருவரும் ஒரே கட்சியில் அனேக ஆண்டுகள் தோழர்களாக இருந்தும் நிர்வாக விஷயத்தில் இருவரும் அவரவர் தனித்தன்மையைக் காட்டினர்.

ஏவுகணை நாயகர் கலாம்

2002 தேர்தலின்போது ஏவுகணை நாயகர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமை ஆளும் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவித்து பெரிய வியப்பை ஏற்படுத்தினார் பிரதமர் வாஜ்பாய். காங்கிரஸ் கட்சியும் கருத்தொற்றுமையுடன் அவருடைய பெயரை ஆதரித்து வெற்றி பெற வைத்தது.

2012-ல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பைரோன் சிங் ஷெகாவத்தை வேட்பாளராக அறிவித்தது. காங்கிரஸ் கட்சி, பிரதிபா பாட்டீலை நிறுத்தியது. முதல் பெண் குடியரசுத் தலைவரானார் பிரதிபா பாட்டீல்

2012-ல் காங்கிரஸ் தலைவர்களில் மூத்தவரான பிரணாப் முகர்ஜி இடதுசாரிகள் மற்றும் பிற எதிர்க்கட்சிகள் ஆதரவில் குடியரசுத் தலைவரானார். அவருடைய பதவிக்காலத்தில்தான் காங்கிரஸ் மத்தியில் ஆட்சியை இழந்து குஜராத் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடி, பிரதமரானார். கட்சி வேறுபாடுகளை மறந்து மோடிக்கு அவ்வப்போது நல்ல ஆலோசனைகளை வழங்கி வழிநடத்தினார் முகர்ஜி. இதை மோடியே தெரிவித்திருக்கிறார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வலிமை அதிகரித்த பிறகு 2017 தேர்தலில் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த வழக்கறிஞரும் பாஜகவின் தலைவருமான ராம்நாத் கோவிந்த் வேட்பாளராக நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றார்.

இப்போது பாஜக கூட்டணியால் 49 சதவீத வாக்குகளைத் திரட்டிவிட முடியும், எனவே அந்தக் கட்சி நிறுத்தும் வேட்பாளர்தான் குடியரசுத் தலைவர் என்றாலும் பாஜக தலைமையும் பிரதமர் மோடியும் மெத்தனமாக இருக்கவில்லை. தங்களுடைய அணியில் இடம்பெறாவிட்டாலும் பொது விஷயங்களில் தங்களை ஆதரிக்கக் கூடிய ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக், ஆந்திரத்தின் ஒய்எஸ்ஆர். காங்கிரஸ் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, தமிழ்நாட்டின் பிரதான எதிர்க் கட்சியான அஇஅதிமுக ஆகியவற்றின் ஆதரவைக் கோரியிருக்கிறது தேசிய ஜனநாயக கூட்டணி.

காங்கிரஸின் முக்கியத்துவம்

பாஜக தலைமையிலான கூட்டணியை எதிர்ப்பதற்கு சரியான கட்சி திரிணமூல் காங்கிரஸ்தான் என்பது மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் கருத்து. கடுகு சிறுத்தாலும் காரம் போகாது, காங்கிரஸ் கட்சி மூன்று இலக்க எண்ணில் மக்களவையில் இல்லாவிட்டாலும் நாடு முழுவதும் கிராமத்துக்குப் பத்து பேராவது தொடர்ந்து ஆதரிக்கும் தேசியக் கட்சி காங்கிரஸ்தான் என்பதால் பிரதான எதிர்க்கட்சி என்ற இடம் தங்களுக்கே உரியது என்று காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்துகிறது. மகாராஷ்டிரத்தில் தேசியவாத காங்கிரஸ், சிவசேனாவுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி நடத்துகிறது. ஜராக்க்கண்டில் முக்தி மோர்ச்சா அரசில் இடம்பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் கூட்டணி அரசில் இடம்பெறாவிட்டாலும் திமுக கூட்டணியின் பிரிக்க முடியாத தோழமைக் கட்சியாகத் தொடர்கிறது.

ராஜஸ்தான், சத்தீஸ்கரில் காங்கிரஸ் தனித்தே ஆள்கிறது. தெலங்கானாவில் முக்கிய எதிர்க்கட்சியாகத் திகழ்கிறது. ஒடிசாவில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அரசமைப்புச் சட்டம் அளித்த சிறப்பு அந்தஸ்தை 370-வது பிரிவை ரத்து செய்து பாஜக அரசு நீக்கியதிலிருந்து தேசிய மாநாடு, மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) ஆகியவற்றுடன் இணைந்து காஷ்மீருக்காகத் தொடர்ந்து குரல் கொடுக்கிறது. மேற்கு வங்கத்தில் இடதுசாரி முன்னணி, காங்கிரஸ் இரண்டுமே முக்கிய எதிர்க் கட்சியாகக் கூட பேரவையில் இடம் பெற முடியாவிட்டாலும் இன்னமும் தொண்டர்கள் பலத்துடன் காங்கிரஸ் இருக்கிறது. அசாம், திரிபுரா, இமாசலம் ஆகியவற்றில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரவும் வாய்ப்புகள் இருக்கின்றன. கேரளமும் கர்நாடகமும்கூட காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடிய மாநிலங்களாக இருக்கின்றன. எனவே காங்கிரஸ் கட்சியை ஒதுக்க பிற எதிர்க்கட்சிகள் அதாவது மாநிலக் கட்சிகள் விரும்பவில்லை.

யஷ்வந்த் சின்ஹா

போட்டியாளர்கள்

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத் பவார், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா, மேற்கு வங்க மாநில முன்னாள் ஆளுநரும் மகாத்மா காந்தியின் பேரனுமான கோபால கிருஷ்ண காந்தி ஆகியோர் பெயர்கள் பத்திரிகைகளில் வெளியாகின. அதன் பிறகு அவர்கள் ஒவ்வொருவராக தாங்கள் போட்டியிட விரும்பவில்லை, தேசத்துக்கு சேவை செய்யவே விருப்பம் என்று தெரிவித்துவிட்டனர். ‘கோட்சேக்களை எதிர்த்து காந்தி’ என்று பிரச்சாரம் செய்ய வசதியாக இருக்கும் என்று மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர் சீதாராம் யெச்சூரி, இத்தேர்தலில் கோபால கிருஷ்ண காந்தி போட்டியிடுவதை மிகவும் விரும்பினார்.

இறுதியில் முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா பெயர் பொது வேட்பாளராக இப்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது. மோடியைக் கடுமையாக எதிர்க்கும் சின்ஹா, வாஜ்பாய் அரசில் நிதியமைச்சராக இருந்தவர். பாஜகவிலிருந்து திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இப்போது பொது வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கு முன்பாக திரிணமூலில் இருந்தும் விலகிவிட்டார்.

போட்டியே இல்லாமல் விட்டுவிடக் கூடாது என்பதற்காக எதிர்க்கட்சிகள் யாரையாவது நிறுத்துவதை வழக்கமாக வைத்துள்ளன. இந்த வாய்ப்பைக் கூட தென்னிந்திய மாநிலக் கட்சிகளுக்குத் தர வேண்டும் என்று அவற்றுக்குத் தோன்றாதது விமர்சிக்கப்படுகிறது.

திரௌபதி முர்மு

இஸ்லாமியச் சமூகத்தைச் சேர்ந்த ஷாநவாஸ் உசைன் அல்லது முக்தார் அப்பாஸ் நக்வி அல்லது கேரள ஆளுநர் ஆரிஃப் முகம்மது கான், இப்போது குடியரசு துணைத் தலைவராக இருக்கும் வெங்கய்ய நாயுடு ஆகியோர் பெயர்கள் அடிபட்ட நிலையில், பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த திரௌபதி முர்மு பாஜக கூட்டணியின் வேட்பாளராக நேற்று அறிவிக்கப்பட்டார். அவரது பெயரும் ஏற்கெனவே பரிசீலனையில் இருந்தது.

குடியரசுத் தலைவராக, முன்னேறிய சமூகத்தினர், பட்டியல் இனத்தவர்கள், சிறுபான்மைப் பிரிவைச் சேரந்தவர்கள் இருந்துவிட்டனர். பழங்குடியினருக்கு இதுவரை அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. திரௌபதி முர்முவுக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்தத் தேர்தலில் அவர் வென்றால், பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒரு பெண் இந்தியாவின் குடியரசுத் தலைவராகிறார் எனும் பெருமை கிடைக்கும்!

x