திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே முன்விரோதம் காரணமாக கூலி தொழிலாளியின் கழுத்தை அறுத்து கொலை செய்த இருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ் (26). இவர் மீது பல்வேறு காவல்நிலையங்களில் கொலை முயற்சி, திருட்டு, வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளும், 2 குண்டா் தடுப்புச் சட்ட வழக்குகளும் நிலுவையில் உள்ளன. கடந்த மார்ச் மாதம் ஊர் திருவிழாவின்போது ஏற்பட்ட தகராறில் மனோஜ் ஒருவரை கத்தியால் குத்தியுள்ளார். இந்த வழக்கில் அவரை காவல்துறையினர் மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சூழலில், கடந்த வாரம் மனோஜ் ஜாமீனில் வெளியே வந்தார்.
இதனையடுத்து, நேற்று மாலை முத்தாலம்மன் கோயில் பின்புறம், மனோஜும், அவரது நண்பர் அன்பும் மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வேலையை முடித்துவிட்டு, வீட்டிற்கு வந்த ராஜ்குமாரிடம் இருவரும் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, தகராறு முற்றவே அவர்கள் இருவரும், ராஜ்குமாரின் கழுத்தை கத்தியால் அறுத்துக் கொலை செய்தனர்.
தொடர்ந்து, இதுகுறித்து வழக்கு பதிந்த, அம்மையநாயக்கனூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், நிலக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் சுகுமார் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு, விசாரணை நடத்தினர். மேலும், அந்த இருவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், ஏற்கெனவே மனோஜ், அன்பு ஆகியோருக்கும் ராஜ்குமாருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்ததாகவும், அதன் காரணமாகவே இந்த கொலை நடந்திருக்கலாம் என்கின்றனர் காவல்துறையினர்.