மதுபோதை தகராறில் சுமைதூக்கும் தொழிலாளி வெட்டிக்கொலை: மூவர் கைது


மது போதையில் தகராறு ஏற்பட்ட நிலையில் சுமை தூக்கும் தொழிலாளியை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய மூவரை மதுரை செல்லூர் காவல் துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மதுரை செல்லூர் மேல தோப்பு பகுதியைச் சேர்ந்த தெய்வேந்திரன் மகன் பிச்சைமணி(33). சுமை தூக்கும் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று இரவு பாலம் ஸ்டேஷன் சாலையில் உள்ள சிவன் கோயில் அருகே சிலருடன் சேர்ந்து மது அருந்திக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது, திடீரென அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் சுமார் நான்கு பேர் அடங்கிய கும்பல் பிச்சைமணியை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றனர். இதில் பலத்த காயமடைந்த பிச்சைமணியை, அப்பகுதியினர் மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

தொடர்ந்து, இவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து, இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றிய செல்லூர் காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இக்கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட செல்லூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக், கவின் என்ற கவியரசு மற்றும் லஷ்மணன் ஆகிய மூவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

x