ஆருத்ரா நிறுவனத்தின் 100 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கம்!


ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவனத்திற்கு சொந்தமான 100 கோடி ரூபாய் சொத்துக்கள், 70 வங்கி கணக்குகளை முடக்கி பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தமிழகம் முழுதும் பொதுமக்களிடம் ஒரு லட்ச ரூபாய் பணம் கட்டினால் மாதம் 30 ஆயிரம் ரூபாய் வட்டி தருவதாக கவர்ச்சி விளம்பரங்களைக் காட்டி மோசடியில் ஈடுபட்டதாக கடந்த மே 24-ம் தேதி பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார், தமிழகம் முழுவதும் உள்ள ஆருத்ரா நிதி நிறுவனம் மற்றும் அதன் தொடர்புடைய 26 இடங்களில் அதிரடியாக சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் கணக்கில் வராத 3.41 கோடி ரூபாய் பறிமுதல் செய்து 11 வங்கிக் கணக்குகளை முடக்கம் செய்தனர். இது தொடர்பாக ஆருத்ரா நிதி நிறுவனத்தின் இயக்குனர்கள் 14 பேர் மீதும், 5 ஆருத்ரா நிறுவனங்கள் மீதும் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். ஆருத்ரா நிதி நிறுவனத்தின் இயக்குனர் பாஸ்கர் மற்றும் மோகன் பாபு ஆகிய இருவர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கடந்த ஒரு மாதங்களுக்கும் மேலாக தலைமறைவாக உள்ள மற்ற இயக்குனர்களை தனிப்படை அமைத்து போலீஸார் தேடி வருகின்றனர். இந்நிலையில் ஆருத்ரா கோல்டு நிறுவனத்திற்கு சொந்தமான 100 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் மற்றும் 70 வங்கி கணக்குகள் ஆகியவற்றை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் முடக்கி நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே 11 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 70 வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்வழக்கு விசாரணை அதிகாரியாக பொருளாதாரக் குற்றப்பிரிவு எஸ்பி ஜெயச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

x