விழுப்புரத்தில் பொதுத்தேர்வு முடிவுக்குப் பின் 5 மாணவர்கள் தற்கொலை… 5 பேர் தற்கொலை முயற்சி: நிறை குறைகளைச் சொல்லி வளர்க்க மருத்துவர்கள் அட்வைஸ்!



நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட10,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளுக்குப் பின் விழுப்புரம் மாவட்டத்தில் 2 மாணவிகள், 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மேலும் 5 மாணவ, மாணவியர் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இந்நிலையில் விழுப்புமரம் மாவட்டத்தில் 2 மாணவிகள், 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மேலும் 5 மாணவ, மாணவியர் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர்.

இதுகுறித்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மனநல மருத்துவர் மணிகண்டன் கூறுகையில், " குழந்தைகளை வளர்க்கும்போது வாழ்வின் நிறை, குறைகளைச் சொல்லி பெற்றோர்கள் வளர்க்கவேண்டும். மகாத்மா காந்தி, நெல்சன் மாண்டலே, புத்தர் போன்றவர்களின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லி தரவேண்டும். அதிகம் படிக்காமல் வாழ்வில் வெற்றி பெற்ற நமது முதல்வர், நடிகர்கள் ரஜினிகாந்த், கமலஹாசன், கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், மகேந்திரசிங் தோனி போன்றவர்களை உதாரணப்படுத்த வேண்டும். ஒவ்வொரு குழந்தையும் 14 வயதுக்குமேல் சுயமாக சிந்தித்து, முடிவெடுக்கிறார்கள். அப்போது பெற்றோர்கள் குழந்தைகள் எதிரில் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை தவிர்க்கவேண்டும். அதிக செல்லமும், அதிக கண்டிப்பும் கூடாது. கேட்டவுடன் எதையும் வாங்கி கொடுக்கக்கூடாது. ஒருமுறைக்கு பலமுறை கேட்ட பின்பு வாங்கிக் கொடுக்கவேண்டும். அப்படி வாங்கிக் கொடுக்க எவ்வளவு கஷ்டப்பட நேர்ந்தது என்பதை சொல்லி தரவேண்டும். அப்போதுதான் குழந்தைகள் தோல்வியைப் பழகும் குணம் வரும்" என்றார்.

இது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகனிடம் கேட்டபோது," மாணவர்களுக்கு நீதிபோதனை வகுப்புகள் நடத்துவதை கண்காணிக்கவும், தேர்வு முடிவுகளை எப்படி பார்ப்பது என்பது கற்று தரவும், தங்களின் குழந்தைகளிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என மாணவர்களின் பெற்றோர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

x