குடியரசுத் தலைவர் வேட்பாளரை பாஜக இன்று முடிவுசெய்யுமா?


குடியரசுத் தலைவர் வேட்பாளர் யார் என்பதை முடிவுசெய்வதில் எதிர்க்கட்சிகள் தடுமாறிக்கொண்டிருக்கும் நிலையில், பாஜக சார்பில் நிறுத்தப்படப்போவது யார் என இன்று தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாஜக நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று (ஜூன் 21) நடைபெறவிருக்கும் நிலையில், இதுதொடர்பாக முடிவெடுக்கப்படும் எனத் தெரிகிறது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி, காணொலி வாயிலாகக் கலந்துகொள்வார் என்றும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக, மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜியின் அழைப்பின்பேரில், ஜூன் 15-ல் எதிர்க்கட்சித் தலைவர்களின் டெல்லியில் உள்ள கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் நடந்தது. அந்தக் கூட்டத்தில் திரிணமூல் காங்கிரஸ், காங்கிரஸ், திமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சி, சிவசேனா, ராஷ்ட்ரிய ஜனதா தளம் உட்பட 17 கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். எனினும், அதன் பின்னர் எதிர்க்கட்சிகள் எடுத்துவரும் முயற்சிகள் முயற்சிகள் பலனளிக்கவில்லை.

எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிடலாம் எனப் பேசப்பட்ட சரத் பவார், ஃபரூக் அப்துல்லா, கோபால் கிருஷ்ண காந்தி ஆகியோர் போட்டியிட விருப்பமில்லை எனத் தெரிவித்துவிட்டனர்.

பாஜக முயற்சி

குடியரசுத் தலைவர் தேர்தலைக் கண்காணிக்க பாஜக சார்பில் பிரத்யேகமாக ஒரு குழு உருவாக்கப்பட்டிருக்கிறது. மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தலைமையிலான இக்குழுவில் 14 உறுப்பினர்கள் இடம்பெற்றிருக்கிறார்கள்.

ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 19) பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா தலைமையில் டெல்லியில் நடந்த கூட்டத்தில் இந்தக் குழுவைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர். கஜேந்திர சிங் ஷெகாவத், அஷ்வினி வைஷ்ணவ், ஜி.கிஷன் ரெட்டி, சம்பித் பாத்ரா உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர்களிடமும் பேசி ஒருமித்த கருத்தை உருவாக்கவும் பாஜக சார்பில் எடுக்கப்பட்டுவருகின்றன. இதற்கான முயற்சிகளில் ஜேபி நட்டாவும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் ஈடுபட்டுவருகின்றனர்.

சரத் பவார், மம்தா பானர்ஜி, ஃபரூக் அப்துல்லா, பிஹார் முதல்வர் நிதீஷ் குமார், ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் போன்றோரிடம் பாஜக சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. எனினும், இதில் சாதகமான எந்தப் பதிலும் பாஜகவுக்குக் கிடைக்கவில்லை.

இந்நிலையில், இன்று நடைபெறவிருக்கும் பாஜக நாடாளுமன்றக் கூட்டத்தில் முக்கிய அறிவிப்புகள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

யஷ்வந்த் சின்ஹா

இதுதொடர்பாக முடிவெடுக்க, எதிர்க்கட்சித் தலைவர்கள் இன்று மதியம் சந்தித்துப் பேசவிருக்கிறார்கள். முந்தைய பாஜக அரசுகளில் மத்திய அமைச்சராகப் பதவிவகித்தவரும், தற்போது திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராகப் பதவிவகிப்பவருமான யஷ்வந்த் சின்ஹாவின் பெயர் எதிர்க்கட்சிகளின் சார்பில் பரிசீலிக்கப்படுகிறது.

ஜூலை 18-ல் வாக்குப்பதிவு நடைபெறும். ஜூலை 21-ல் முடிவுகள் வெளியிடப்படும். வேட்புமனு தாக்கல் செய்ய ஜூன் 29-ம் தேதி கடைசி தினம் ஆகும்.

x