பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் தனது பள்ளியிலேயே முதல் இடம் பிடித்துள்ள காட்டு நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவன், தான் ஒரு ஐஏஎஸ் அலுவலராக ஆக வேண்டும் என்று ஆசை தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர்கள் கண்ணன் - ஜெயா தம்பதியினர். குறிசொல்லும் காட்டு நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்த இவர்களது மகன் ரவி. இவர் வரலாற்றுப் பாடத்தை தேர்வு செய்து திருப்பரங்குன்றம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், இன்று 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் வெளியானது. இதில், ரவி 600-க்கு 544 மதிப்பெண் பெற்று தனது பள்ளியிலேயே முதல் இடம் பிடித்துள்ளார். இதுகுறித்து, அவர் கூறும்போது, "வறுமை மற்றும் கரோனா பெருந்தொற்று நான் படிப்பதற்கு மிகப்பெரும் சவாலாக அமைந்தது.
கரோனா ஊரடங்கு காலத்தில் பள்ளிகள் மூடப் பட்டிருந்த சூழலில், படிப்பதற்காக இன்டர்நெட் வசதியுடன் கூடிய ஸ்மார்ட் போன் பெறுவதில் பெரும் கஷ்டம் இருந்தது. வீட்டில் மின்சார வசதியில்லாத நிலையில், எனது மாமா வீட்டிற்குச் சென்று தினமும் 3 மணி நேரம் தேர்வுக்காக படித்து வந்தேன். எனது பள்ளி ஆசிரியர்கள் எனக்கு அளித்த ஊக்கமும், உதவியும் தான் என்னை இந்த அளவிற்கு உயர்த்தியுள்ளது" என்றார்.
மேலும், அவரது லட்சியம் குறித்து கேட்டபோது, "நான் ஒரு ஐஏஎஸ் அதிகாரியாக ஆக வேண்டும், அடிப்படை வசதிகளை பெற போராடி வரும் எங்களைப்போன்ற சமூகத்தினருக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே எனது நோக்கம். இளநிலை படிப்பில் வரலாற்று பாடத்தை தேர்வு செய்யலாம் என்று முடிவு செய்துள்ளேன்" என்றார்.