திருவிழாவிற்கு வசூல் செய்யும் பணத்தை தன்னிடம் கொடுக்க வேண்டும் என ஊராட்சி மன்றத் தலைவர் அடிதடியில் ஈடுபட்டதால் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், விஷார் ஊராட்சியில் கோவில் திருவிழா ஏற்பாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கிராம மக்கள் சார்பில் இன்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள், கிராமணி, கிராம நாட்டாமைகாரர்கள், ஊர் பெரியவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதில் கலந்து கொண்ட ஊராட்சி மன்றத் தலைவர் கார்த்திக் அங்கிருந்த கிராம முக்கியஸ்தர்களிடம், "ஒவ்வொரு வார்டிலும் உள்ள மக்களிடம் வசூலிக்கும் பணத்தை என்னிடம் ஒப்படைக்க வேண்டும். நான்தான் ஊர் திருவிழாவை நடத்துவேன்" எனக் கூறினார்.
இதையடுத்து அவர்களுக்குள் கடுமையான வாக்குவாதம் நடைபெற்றது. இதனால் ஆத்திரமடைந்த ஊராட்சி மன்றத் தலைவர் கார்த்திக் திடீரென அங்கு அமர்ந்திருந்த ஊர் கிராமணி விஜயகுமாரை சரமாரியாகத் தாக்கினார். ரத்த காயங்களுடன் துடித்த அவரை மீட்ட அப்பகுதியினர் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்த சம்பவம் குறித்து விஜயகுமாரின் தம்பி முனியன் கூறுகையில், “ஊராட்சி மன்றத் தலைவர் குபேர் என்ற கார்த்திக், மறைந்த தாதா ஸ்ரீதரிடம் ஓட்டுநராக வேலை செய்தார். அவர்மீது பாலுசெட்டிசத்திரம் காவல் நிலையத்தில் கொலை மிரட்டல், கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. தேர்தலில் வெற்றி பெற்று தலைவராக ஆனதிலிருந்து எல்லோரையும் மிரட்டி வருகிறார். இப்போது என்னுடைய அண்ணனை கொலை செய்துவிடுவதாக மிரட்டியதால் அவர் பயத்தில் இருக்கிறார்.” என்றார். மேலும் விஜயகுமாரை தாக்கியது தொடர்பாக கார்த்தி மீது பாலுசெட்டி சத்திரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றது.