முன்னாள் டிஜிபி ஜாபர் சேட்டிடம் அமலாக்கத்துறை விசாரணை!- காரணம் இதுதான்


வீட்டு வசதி வாரிய நிலம் ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக ஓய்வு பெற்ற டிஜிபி ஜாபர் சேட்டிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது.

2006-ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது மாநில உளவுத்துறை ஐஜியாக பணியாற்றிய போது ஜாபர்சேட்க்கு வீட்டுவசதி வாரியம் சார்பில் நிலம் ஒதுக்கப்பட்டது. அந்த ஒதுக்கீடு ரத்து செய்து, ஜாபர்சேட்டின் மனைவி மற்றும் மகள் ஆகியோருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த விவகாரத்தில் முறைகேடு நடந்து இருப்பதாக கூறி லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. அப்புகாரின் அடிப்படையில் ஜாபர் சேட் உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது.

இவ்வழக்கில் ஜாபர் சேட்டுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இதனையடுத்து ஐபிஎஸ் அதிகாரியான தன் மீது மத்திய அரசின் அனுமதியின்றி வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறி உயர் நீதிமன்றத்தில் ஜாபர் சேட் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கில் ஜாபர் சேட் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்யுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில் 2007-2008-ம் ஆண்டு, ஜாபர் சேட்டுக்கு வீட்டுவசதி வாரியம் இட ஒதுக்கீடு தொடர்பாக அமலாக்கத் துறை விசாரணை தொடங்கியுள்ளது. அதனடிப்படையில் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஓய்வு பெற்ற டிஜிபி ஜாபர் சேட் இன்று விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

x