`தோல்வி அடைந்துவிட்டீர்களா? கவலைப்படாதீங்க'- மாணவர்களுக்கு அன்பில் மகேஷ் அளிக்கும் உறுதி


பொதுத் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களின் விவரங்களைக் கொண்டு கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களே அவர்களிடம் நம்பிக்கையூட்டும் விதமாகப் பேசுவார்கள் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் நடைபெற்ற 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளைப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று காலை வெளியிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் சந்தித்த அன்பில் மகேஷ், “தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் எவ்வித தவறான முடிவுகளையும் எடுக்க வேண்டாம். தோல்வி அடைந்த மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுப்பதற்காகப் பள்ளியில் ஆசிரியர்கள் இருக்கிறார்கள். மேலும் 14417 என்ற கட்டணமில்லா தொலைப்பேசியிலும் மாணவர்கள் தொடர்பு கொண்டு பேசலாம். தோல்வியில் இருக்கும் மாணவர்கள் எங்களைத் தொடர்பு கொள்கிறார்களோ இல்லையோ, அந்த டேட்டாவை வைத்துக் கொண்டு நாங்கள் அவர்களை தொலைப்பேசியில் தொடர்பு கொள்வோம். இதுகுறித்து கல்வித் துறை அதிகாரிகள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

மாணவர்களுக்குத் தன்னம்பிக்கையை வளர்க்கும் விதமாக அரசாங்கம் அவர்களுக்குத் துணை நிற்கும். ஜூலை மாதம் நடைபெறும் துணைத் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெறமுடியும். இந்த கல்வி ஆண்டே அவர்கள் உயர் வகுப்புகளுக்குச் செல்ல நாங்கள் நடவடிக்கை எடுப்போம். 12-ம் வகுப்புகளுக்கு 25.07.2022 அன்றும் 02.08.2022 அன்றும் துணைத் தேர்வுகள் தொடங்கும். மதிப்பெண் சான்றிதழ் கிடைக்கும் வரை தற்காலிக சான்றிதழை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். தற்காலிக சான்றிதழை 24.06.2022 அன்றிலிருந்து இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்” என்றார்.

x