பாடத்திட்டத்தில் புராணங்கள், இதிகாசங்கள் இடம்பெறக்கூடாது: அமைச்சர்கள் பங்கேற்ற மாநாட்டில் தீர்மானம்


பாடத்திட்டத்தில் புராணங்கள், இதிகாசங்கள் இடம்பெறக்கூடாது என்பது உள்பட 12 தீர்மானங்கள் பகுத்தறிவாளர் கழக பொன்விழா நிறைவு மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் நேற்று பகுத்தறிவாளர் கழக பொன்விழா நிறைவு மாநில மாநாடு நடைபெற்றது. இவ்விழாவிற்கு மாநில பகுத்தறிவாளர் கழக தலைவர் இரா.தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். பொதுச்செயலர் ஆ.வெங்கடேசன் வரவேற்றார். சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சிமஸ்தான் முன்னிலை வகித்தார். உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி மாநாட்டினை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். கருத்தரங்கை மனோன்மணியம் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் ஆ.டி.சபாபதிமோகன் உரையாற்றினார்.

தொடர்ந்து பகுத்தறிவாளர் கழக மாநில தலைவர் வீ.குமரேசன் தலைமையில் தீர்மான அரங்கம் நடைபெற்றது. தீர்மானங்கள் குறித்து திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரையாற்றினார்.

இந்திய அரசியல் சட்டத்தின்படி மக்களிடத்தில் அறிவியல் மனப்பான்மை, சீர்திருத்தம், மனிதநேயம் ஆகியவற்றை வளர்க்க வேண்டும், அரசு பணிமனையில் கோயில் கட்டுவது, ஆயுத பூஜை செய்வதை தடை செய்ய வேண்டும், நடைபாதை கோயில்களை அகற்ற வேண்டும், பாடத்திட்டத்தில் புராணங்கள், இதிகாசங்கள் இடம்பெறக்கூடாது, சாதி படிவங்களில் எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி போன்ற அடையாளங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும், சாதி பெயரை முழுமையாக குறிப்பிடக்கூடாது. கைகளில் சாதி வாரியாக வண்ண கயிறுகளை கட்ட தடைவிதிக்க வேண்டும் என 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதைத் தொடர்ந்து விழுப்புரம் மண்ட தி.க.செயலாள ர் இளம்பருதி தலைமையில் மூட நம்பிக்கை ஒழிப்பு பேரணி நடைபெற்றது. இதில், பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு, சிபிஐ கட்சி மாநில செயலர் இரா.முத்தரசன், விசிக.தலைவர் தொல்.திருமாவளவன், தி.க.துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், தி.க. பிரச்சார செயலர் வழக்கறிஞர் அருள்மொழி ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர். மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் வே.ரகுநாதன் நன்றி கூறினார்.

x