பாரத் பந்த் காணும் ‘அக்னி பத்’ எதிர்ப்பு: பதற்றம் தணிக்க ‘சுப்பா ராவ்’களுக்கு வலை!


மத்திய அரசு அறிவித்துள்ள ‘அக்னி பத்’ திட்டத்துக்கு எதிரான போராட்ட அனல் குறைந்தபாடில்லை. போராட்டக்காரர்கள் விடுத்திருக்கும் ‘பாரத் பந்த்’தை முன்னிட்டும் நாடு தழுவிய பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் கண்டு வருகின்றன. அவற்றின் அங்கமாக ரயில் நிலைய போராட்டங்களின் பின்னணியில் செயல்பட்டதாக, ராணுவ வேலைவாய்ப்புக்கு பயிற்சியளிக்கும் மையங்களின் நிர்வாகிகளை போலீஸார் கண்காணித்து வருகின்றனர்.

உக்ரைன் - ரஷ்யா போரின் தொடர்ச்சியாக அறிவிக்கப்படாத உலகப் போருக்கு உலக நாடுகள் தயாராகி வருகின்றன. உக்ரைன் போர்க் களம் அவர்களுக்கு பல படிப்பினைகளையும் தந்து வருகின்றன. அவற்றில் முக்கியமானது ராணுவத்தில் நவீன மயம்! ராணுவ வீரர்களின் புஜபல பராக்கிரமங்களைவிட நவீனமும், நாசகாரமும் இணைந்த ஆயுதங்கள், அவற்றை செயல்படுத்தும் தொழில்நுட்பங்கள், அனைத்தையும் ஒருங்கிணைக்கும் மூளைக்காரர்கள் என புதிய மாற்றங்களுக்கு மேற்கத்திய ராணுவங்கள் தயாராகி உள்ளன.

அவற்றுக்கு இணையாக மாற விரும்பும் இந்தியாவில், பல ஆண்டுகளாகவே ராணுவ சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு அழுத்தம் தரப்பட்டு வருகின்றன. அதன்படி செலவினங்களில் பெரும்பங்கு ராணுவ வீரர்களுக்கு செல்வதை, ஆயுத கொள்முதல் மற்றும் தளவாடங்கள் தயாரிப்பில் திருப்பிவிட முடிவானது. இந்த நோக்கத்தில் உதயமான திட்டங்களின் முக்கியமானது, தற்போது சர்ச்சைக்கு ஆளாகி இருக்கும் ’அக்னி பத்’ ஆள்சேர்ப்பு திட்டம்.

ஜூன் 15 அன்று மத்திய அரசு அக்னி பத் திட்டத்தை அறிவித்த சூட்டில் ஆட்சேபங்கள் அதிகரித்தன. கரோனா பரவல் காரணமாக ராணுவத்துக்கு ஆளெடுக்கும் பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக சுணங்கிக் கிடந்தன. அதற்காக தயாராகி இருந்த இளைஞர்களை அக்னி பத் அறிவிப்பு சீண்டியது. மத்திய அரசுக்கான எதிர்ப்பை தெரிவிக்கும் முகமாய் ரயில் நிலையங்களில் தங்கள் கொதிப்பை காட்ட ஆரம்பித்தனர். அனைவரும் இளைஞர்கள் என்பதால் அவர்களின் போராட்டம் சுலபத்தில் வன்முறையாக வெடித்தது.

ரயில் நிலையத்தின் பொது உடமைகள் அடித்து நொறுக்கப்பட்டன. ரயில்களுக்கு தீ வைக்கப்பட்டன. பஞ்சாப், ஹரியாணா , பிஹார், உத்தர பிரதேசம் ஆகிய வட மாநிலங்களில் இந்த போராட்டம் வேகமெடுத்தது. வட மாநிலங்கள் கொந்தளித்தபோதும் தென்னகத்தில் கண்டன போராட்டங்களுக்கு அப்பால் பெருமளவு சட்டம் ஒழுங்கு சீர்குலையாதிருந்தது. ஆதரவு - எதிர்ப்பு எதுவானாலும் வடக்கு தெற்காக பிரிந்திருக்கும் மக்களின் மனோபாவம் இதிலும் எதிரொலிப்பதாக தொடக்க கணிப்புகள் இருந்தன. ஆனால், ஒருங்கிணைந்த ஆந்திராவில் உருவெடுத்த போராட்டங்கள் அந்த கணிப்புகளை உடைத்தன.

அக்னி பத் எதிர்ப்பு ரயில் நிலைய போராட்டங்களில் பிஹார் முன்நின்றது. ஆனபோதும் ஆந்திராவின் செகந்திராபாத்தில் திரண்ட ஆவேச இளைஞர் படையும், கலவர வெடிப்பும், தீக்கிரையான ரயில்களும் நாட்டையே திரும்பி பார்க்க செய்தது. ஆந்திராவின் செகந்திராபாத் போராட்டத்தின் வேர் தேடி ஆராய்ந்த போலீஸாருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில், இதர மாநிலங்களிலும் தற்போது விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. செகந்திராபாத் போராட்டத்தின் பின்னணியில் ராணுவ வேலைவாய்ப்புகளுக்கு பயிற்சியளிக்கும் மையங்களின் நிர்வாகிகளை போலீஸார் வளைத்தனர்.

இதில் சுப்பாராவ் என்பவர் முதலாவதாக சிக்கினார் . முன்னாள் ராணுவ வீரரான இவர் நரசராவ்பேட்டில் சாய் டிஃபன்ஸ் அகாடமி என்ற பெயரில் பயிற்சி மையம் நடத்துகிறார். மேலும் இதர பயிற்சி மையத்தினரோடு தொடர்பிலும் உள்ளார். சுப்பாராவ் வழிகாட்டுதலில் ஏராளமானோர் ராணுவப்பணிகளுக்கு சென்றுள்ளனர். இந்த சுப்பாராவ், கரோனா காரணமாக வருமானமும் படுத்துப்போன துக்கத்தில் இருந்திருக்கிறார். தற்போது புதிய திட்டமான அக்னி பத் அறிவிப்பு காரணமாகவும் ஏமாற்றம் கொண்டிருக்கிறார்.

சுப்பாராவ்

செகந்திராபத்தில் கைதான நூற்றுக்கும் மேலான இளைஞர்களின் வாட்ஸ் அப் கணக்குகளில், சுப்பா ராவ் தொடங்கிய அக்னி பத் எதிர்ப்புக்கான பிரத்யேக குழுக்கள் இருந்தன. நேரம் இடம் திரள்வதற்கான திட்டம் உள்ளிட்ட போராட்டத்துக்கான வழிகாட்டுதல்கள் அவற்றில் வகுக்கப்பட்டிருந்தன. மேலும், சுப்பாராவின் உணர்ச்சி ததும்பும் உரைகளும் அவற்றில் இடம்பெற்றிருந்தன. அக்னி பத் திட்டம் நடைமுறைக்கு வந்தால், ராணுவப்பணியை இலக்காகக் கொண்டு தயாரான இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என்பதை வலியுறுத்தும் கருத்துக்கள் இடம்பெற்றிருந்தன.

போராட்டக் களங்களில் சுப்பாராவ் மையத்தின் சார்பில் சிற்றுண்டி, மோர் என வன்முறையில் ஈடுபடும் இளைஞர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. சுப்பாராவை அள்ளி வந்த போலீஸார் அவருடன் தொடர்பில் உள்ளவர்கள் முதல், இதர மாநிலங்களின் போராட்ட வலைப்பின்னல் வரை விசாரித்து வருகின்றனர். செகந்திராபாத் விசாரணையின் எதிரொலியாக பிஹாரின் பாட்னாவை தலைமையிடமாக கொண்ட ராணுவ வேலைவாய்ப்புக்கான தனியார் பயிற்சி மையங்களில் போலீஸார் சல்லடையிட்டனர். இதன் அடிப்படையில் 2 மையங்களின் நிர்வாகிகள் கைதும் செய்யப்பட்டுள்ளனர்.

பிஹாரைப் பொறுத்தவரை ரயில்கள் உள்ளிட்ட பொது சொத்துக்களுக்கான அச்சுறுத்தலுக்கு அப்பால் பாஜக தலைவர்களும் பேரச்சத்தில் உள்ளனர். இதனால் மாநில பாஜகவை சேர்ந்த 10 தலைவர்களுக்கு ’ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. சுப்பாராவ் பாணியில் ராணுவ பயிற்சி மையங்களின் பங்கு குறித்து உபியிலும் விசாரணைகள் நடந்து வருகின்றன.

இதனிடையே அக்னி பத் எதிர்ப்பாளர்கள் நாளை நாடு தழுவிய போராட்டமாக ’பாரத் பந்த்’துக்கு அழைப்பு விடுத்துள்ளதால் சட்டம் ஒழுங்குக்கான கண்காணிப்பு பணிகள் முடுக்கப்பட்டுள்ளன. அக்னி பத் போராட்டத்தின் தீக்கங்குகள் மற்ற மாநிலங்களுக்கு பரவாது தடுப்பதில் மத்திய உள்துறை அமைச்சகம் தீவிரமாக உள்ளது. இதன் அடிப்படையில் தேவையான நடவடிக்களை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு அவசிய அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. செகந்திராபாத் பாணியில் ’சுப்பாராவ்’களை குறிவைத்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

ராணுவத்தில் சேர்வதற்கான உடல் வன்மை நிறைந்த இளைஞர் கூட்டம் சீற்றத்தோடு போராட்டங்களில் குதிக்கும்போது, குறைந்த அவகாசத்தில் பாதிப்புகள் அதிகமாகவதை அரசுகள் கணித்து வருகின்றன. வேளாண் சட்டங்களுக்கு எதிராக திரண்ட விவசாயிகள் போராட்டம் போன்று அக்னி பத் எதிர்ப்பை வளரவிடக்கூடாது என்பதிலும் உள்துறை அமைச்சகம் முனைப்பாக இருக்கிறது.

எனவே போராட்டக்காரர்களை குளிரச்செய்யும் நோக்கில் நித்தம் பல்வேறு வகையிலான சலுகை அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. இந்த ஆண்டுக்கான அக்னி பத் தேர்வின் வயது வரம்பில் சலுகை, 4 ஆண்டுகள் முடிவில் வெளியேற்றப்படும் 75% அக்னி வீரர்களுக்கு இதர பாதுகாப்பு படைகளில் சேர சிறப்பு ஒதுக்கீடு, பொதுத்துறை வங்கிகள், எண்ணெய் நிறுவனங்கள் உள்ளிட்ட மத்திய அரசு நிறுவனங்களின் பணிகளில் சேர முன்னுரிமை, வங்கிக் கடன்களில் குறைந்த வட்டிச் சலுகை உள்ளிட்ட ஏராளமான அறிவிப்புகள் வெளியானபடி உள்ளன.

இவற்றுக்கு இடையே நாளை (ஜூன் 20) நடைபெறவிருக்கும் பாரத் பந்த் பொறுத்தும் எதிர்வினையாற்ற மத்திய அரசு தயாராகி வருகிறது.

x