கரோனா காரணமாக 3 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த மன்னார்குடி - மயிலாடுதுறை ரயில் நாளை முதல் மீண்டும் இயக்கப்பட உள்ளது.
கரோனா தொற்று பரவல் காரணமாக மயிலாடுதுறையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கும் இயக்கப்பட்டு வந்த பயணிகள் மற்றும் விரைவு ரயில்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் திருச்சி, விழுப்புரம், திருவாரூர் ஆகிய ஊர்களுக்கு மட்டும் பயணிகள் ரயில்களை விரைவு ரயில்களாக மாற்றி கடந்த ஓராண்டு காலமாக மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளன.
ஆனால், மயிலாடுதுறையில் இருந்து மன்னார்குடி செல்லும் பயணிகள் ரயில், திருச்சி செல்லும் பயணிகள் ரயில், விழுப்புரம் செல்லும் பயணிகள் ரயில் ஆகியவை இதுநாள் வரை இயக்கப்படாமல் இருந்து வந்தன. மறு மார்க்கத்திலும் அவை இயக்கப்படவில்லை. அதனால் அவற்றை இயக்க வேண்டும் என்று பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் மன்னார்குடி - மயிலாடுதுறை பயணிகள் ரயில் நாளை முதல் முன்பதிவில்லா விரைவு சிறப்பு ரயிலாக இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மன்னார்குடியில் இருந்து காலை 8.35 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறைக்கு 10.40 மணிக்கு சென்றடையும். மறுமார்க்கத்தில் மயிலாடுதுறையில் இருந்து மாலை 5 மணிக்கு ரயில் புறப்பட்டு மாலை 6.55 மணிக்கு மன்னார்குடி சென்றடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மகிழ்ச்சியடைந்துள்ள ரயில் பயணிகள் இதேபோல திருச்சி, விழுப்புரம் ஆகிய வழித்தடங்களிலும் நிறுத்தப்பட்டுள்ள பயணிகள் ரயில்களை உடனடியாக இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.