கும்பக்கரை இன்று போறீங்களா?: அப்ப கட்டாயம் அருவியில் குளிக்கலாம்!


கும்பக்கரை அருவி

பெரியகுளம் அருகே உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான கும்பக்கரை அருவியில் இன்று மீண்டும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

நீண்ட நாட்களுக்கு பின்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நல்ல மழை பெய்து வருவதால் கும்பக்கரை அருவியில் நீர் வரத்து துவங்கி இந்த ஆண்டு சுற்றுலா களைகட்டத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் அருவியின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் சீரான நீர்வரத்து இன்றி, நீர்வரத்து திடீரென அதிகரிப்பதும், அதன் பின்னர் சில மணி நேரங்களுக்குப் பின் சீரான நீர்வரத்துமாக காணப்படுகிறது. இதனால் வனத்துறை சார்பில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

அதிக நீர்வரத்து இருக்கும் போது சுற்றுலாப் பயணிகள் அருவிக்கு செல்வதற்கும், அருவியில் குளிப்பதற்கும் தடை விதிக்கப்படுகிறது. அதன்படி சில நாட்களாக குளிக்கத் தடை விதிப்பதும், பின்பு தடை விலக்கப்படுவதுமாக நிலைமை தொடர்கிறது. நேற்று முன்தினம் நீர் வரத்து குறைந்த நிலையில் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. நேற்று நீர் வரத்து அதிகம் இருந்ததால் மீண்டும் நேற்று குளிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று நீர்வரத்து குறைந்து காணப்படுவதால் தற்போது சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி அளித்துள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

x