அரசியல் புல்டோசராகும் அமலாக்கத்துறை!


பாஜக அரசின் 8 ஆண்டு கால ஆட்சியில், தெருவில் இறங்கி போராடுவதன் மூலம் இப்போதுதான் தனது இருப்பை முழுதாய் நிரூபித்து வருகிறது பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ்.

சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மீதான அமலாக்கத் துறையின் புதிய நெருக்கடிகளால், காங்கிரசார் நீண்ட உறக்கத்திலிருந்து மீண்டிருக்கிறார்கள். அமலாக்கத்துறை மட்டுமன்றி வருமான வரித்துறை, சிபிஐ, தேசிய பாதுகாப்பு முகமையான என்ஐஏ உள்ளிட்ட நாட்டின் அதிகாரம் மிக்க விசாரணை அமைப்புகளுடன் ’கூட்டணி அமைத்து’, 2024 மக்களவை தேர்தலுக்கு பாஜக தயாராவதாய் பீதியுடன் புகார் வாசிக்கிறது காங்கிரஸ். நாட்டு நிலவரத்தை சற்று ஊன்றி கவனிப்பவர்களால் காங்கிரசின் புகாரை அத்தனை எளிதில் ஒதுக்கிவிட முடியாது.

அமலாக்கத்துறை விசாரணைக்கு எதிராக டெல்லியில் காங்கிரசார் போராட்டம்...

தெளிய வைத்துத் தாக்கும் பாஜக

வளம், வளர்ச்சி என்றெல்லாம் வாய்ப்பந்தலிட்டு முதல்முறை ஆட்சியை பிடித்த பாஜக, அவையெல்லாம் ஆகிற கதையில்லை என்று பெரும்பான்மையினர் உணர்வுகளுக்கு தூபமிடும் இந்துத்துவா முழக்கத்தை முன்னிறுத்தி இரண்டாவது இன்னிங்ஸை உறுதி செய்தது. இப்போது மூன்றாவது முயற்சியாக புதிரான கணக்குகளுடன் 2024 மக்களவை தேர்தலுக்கு அதிரடியாக தயாராகி வருகிறது.

இதற்கான முதலடியாக எதிர்க்கட்சி முகாம்களில் பலவீன ஆடுகளை வேலி தாண்ட வைத்தது. அசராதவர்களை தெளிய வைத்து அடிக்கும் பணியைப் பின்னர் தொடங்கியது. இதற்காக தனது அபிமானத்துக்குரிய, தேசத்தின் உச்ச விசாரணை அமைப்புகளில் அமலாக்கத்துறையை அதிகம் அவிழ்த்து விட்டிருக்கிறது. இந்த அமலாக்கத்துறையின் பாய்ச்சல் எந்த சூழலில் அரங்கேறுகிறது என்பதை கவனித்தால் அதன் பின்னிருக்கும் அரசியல் நோக்கம் பிடிபடும்.

தருணம் பார்த்து பாயும் விசாரணைகள்

பிப்ரவரியில் மேற்குவங்க சட்டமன்ற தேர்தலின்போது திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் அடிமடியில் கை வைத்தது சிபிஐ. ஒரு வருடமாக ஆறிக்கிடந்த நிலக்கரி ஊழல் வழக்கில், மம்தா பானர்ஜியின் மருமகனும் கட்சியின் தளபதியுமான அபிஷேக் பானர்ஜியை அவரது குடும்பத்துடன் வளைத்தது. ஏப்ரலில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு சில தினங்கள் முன்பு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரையின் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனைகள் மேற்கொண்டு ஆழம் பார்த்தனர்.

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், உறவினர் அஜித் பவார் ஆகியோர் மீது ஆறிப்போன கூட்டுறவு வங்கி வழக்குகளின் பேரில் அமலாக்கத்துறை நெருக்கியது. மும்பையில் அம்பானி வீட்டு வெடிகுண்டு மிரட்டலை விசாரிக்க வந்த என்ஐஏ-வை வால்பிடித்து, அக்கட்சி அமைச்சர்களான அனில் தேஷ்முக் மற்றும் நவாப் மாலிக் ஆகியோரை அமலாக்கத்துறை கைது செய்தது.

பஞ்சாப் தேர்தலில் காங்கிரஸ் (முதல்வர்) வேட்பாளராக சரண்ஜித் சிங் சன்னி அறிவிக்கப்பட்டதுமே, மணல் குவாரி விவகாரத்தில் அவரது குடும்பத்தினர் மீது அமலாக்கத்துறை பாய்ந்தது. கேரளாவில் தங்கக் கடத்தல் வழக்கை முன்னிறுத்தி முதல்வர் பினராயி விஜயனின் முதன்மைச் செயலாளர் எம்.சிவசங்கர் கைதானார். சிறப்புச் சட்டம் வாபஸ் பெறப்பட்ட பின்னர் முதல் சட்டப்பேரவை தேர்தலுக்குத் தயாராகும் காஷ்மீரில் முன்னாள் முதல்வர்களான பரூக் மற்றும் உமர் அப்துல்லாக்கள், ஹிமாச்சல் பிரதேசத்தின் ஆம் ஆத்மி தேர்தல் மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்ட டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயின் ஆகியோர் மீதும் அமலாக்கத்துறை வழக்குகள் பாய்ந்திருக்கின்றன. இந்த வரிசையில் எதிர்க்கட்சி மாநில முதல்வர்களான ஜார்கண்டின் ஹேமந்த் சோரன், ராஜஸ்தானின் அசோக்கெலாட், சத்தீஸ்கரின் பூபேஷ் பாகேல் ஆகியோருக்கு எதிராகவும் பல்வேறு வழக்குகளில் அமலாக்கத்துறை அதிவேகம் காட்டி வருகிறது.

விசாரணை அமைப்புகள் பார்வையில் பாரபட்சம்

இப்படி காஷ்மீர் முதல் கேரளாவரை பாஜகவுக்கு எதிரானவர்களை முடக்கும் அமலாக்கத்துறையின் கண்களில், பாஜக பெரும்புள்ளிகள் மீதான புகார்கள் மட்டும் தட்டுப்படுவதில்லை. பெருந்தொற்று பரவல் உச்சத்தின் மத்தியிலும் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவரான சிவக்குமாரை நிலபேர வழக்கின் கீழ் வளைத்த அமலாக்கத்துறை, அதே மாநிலத்தில் 40 சதவீத கமிஷனுக்காக ஒப்பந்ததாரரை தற்கொலையில் தள்ளிய பாஜக அமைச்சர் ஈஸ்வரப்பா பக்கம் இதுவரை திரும்பவே இல்லை.

சொந்தக் கட்சியினர் காபந்து செய்யப்படுவதோடு, பாஜகவுக்கு தாவும் ஊழல் அரசியல்வாதிகள் மீதான வழக்குகளும் சுரத்திழந்து வருகின்றன. மேற்குவங்கத்தின் சாரதா சிட்ஃபண்ட் வழக்கில் சிக்கிய முகுல் ராய், சுவெந்து அதிகாரி ஆகியோர், திரிணமூல் காங்கிரசில் இருந்து பாஜகவுக்கு தாவியதும் சிபிஐ நெருக்கடி பெயரளவில் குறைந்துள்ளது.

ஹாட்ரிக் வெற்றிக்காக...

அரசியல்வாதிகள் மட்டுமல்ல... விசுவாசமிக்க விசாரணை அதிகாரிகளை அரவணைக்கவும் பாஜக தவறுவதில்லை. கறார் விசாரணை அதிகாரியாக 2ஜி அலைக்கற்றை மற்றும் ஏர்செல்-மேக்சிஸ் வழக்குகளில் தடம்பதித்தவர் ராஜேஸ்வர் சிங். இவர் அமலாக்கத் துறையில் விஆர்எஸ் பெற்றதும் வாரியணைத்த பாஜக, தற்போது அவரை உபி சரோஜினி நகர் தொகுதியில் கட்சி எம்எல்ஏ-வாக ஜெயிக்கவைத்து அழகு பார்த்திருக்கிறது.

குஜராத், ஹிமாச்சல் பிரதேசம் மாநிலங்களில் இந்த வருட இறுதியிலும், தெலங்கானா, கர்நாடகா, ராஜஸ்தான் மாநிலங்களில் அடுத்த ஆண்டும் சட்டப்பேரவை தேர்தல்கள் வருகின்றன. முக்கியமாக, மோடியின் 3.0 ஹாட்ரிக் சகாப்தத்தை தீர்மானிக்கும் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு சகல வழிகளிலும் இப்போதிருந்தே பாஜக தயாராகி வருகிறது. இவற்றின் மத்தியில் காங்கிரஸ் கட்சியின் பெருந்தலைகள் மீது அமலாக்கத்துறை தற்போது பாய்ந்திருப்பது, தேசிய அரசியலில் தீ மூட்டியிருக்கிறது.

கடனில் மூழ்கிய நேருவின் கனவு

நேஷனல் ஹெரால்டு நாளிதழ் தொடர்பான பணமோசடி வழக்கில் சோனியா மற்றும் ராகுலை மீண்டும் அமலாக்கத்துறை துருவத் தொடங்கியுள்ளது. தேச விடுதலைக்குப் பத்தாண்டுகள் முன்பே உதயமான பாரம்பரிய இதழான நேஷனல் ஹெரால்ட், ஆங்கிலேய அடக்குமுறைக்கு எதிரான செய்திகளை வெளியிட்டதற்காக சில ஆண்டுகள் தடைக்கும் ஆளாகி இருக்கிறது. ஜவஹர்லால் நேருவின் கனவுக் குழந்தைகளில் ஒன்றான இந்த பத்திரிகை, அவரது மறைவுக்கு பின்னர் காங்கிரசின் கைகளிலிருந்து நழுவி நேருவிய கொள்கைகளில் சேர்ந்தது. எண்பதுகளில் தேய ஆரம்பித்த நேஷனல் ஹெரால்டு மற்றும் அதன் உருது, இந்தி சகோதர பத்திரிகைகளும் புத்தாயிரத்தின் மத்தியில் மொத்தமாய் மூடு விழா கண்டன.

நேஷனல் ஹெரால்டு உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் குரலாக ஒலித்த பாரம்பரிய இதழ்களின், அச்சிட்டு வெளியிடும் பொறுப்புக்காக உடன் தொடங்கப்பட்ட நிறுவனம் அசோசியேட்டட் ஜர்னல் லிட்., (ஏஜேஎல்). காங்கிரஸ் ஆட்சியாளர்கள் தயவில் இந்த நிறுவனத்துக்கு வட இந்தியாவின் முக்கிய நகரங்கள் எங்கும் பெரும் ரியல் எஸ்டேட் சொத்துகள் சேர்ந்திருந்தபோதும், நாளிதழ் நிர்வாகத்தில் தொடர் நஷ்டம் என்று கட்சி பஞ்சப்பாட்டு பாடியது. கட்சிக்காக உழைத்த இதழுக்கு செஞ்சோற்று கடன் தீர்க்க காங்கிரஸ் கட்சி சார்பில் வட்டியில்லா கடனாக சுமார் ரூ.90 கோடி வழங்கப்பட்டது. ஆனபோதும் அச்சிதழாக நிறுத்தப்பட்டதன் பத்தாண்டு இடைவெளியில் (2016) மின்னிதழாக மீண்ட நேஷனல் ஹெரால்டை முன்வைத்து முறைகேடாக பெரும் சொத்து பரிமாற்றங்கள் நிகழ்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

பணமோசடி புகார்கள்

2010-ல் சோனியா மற்றும் ராகுலை பெரும்பங்குதாராக (76%) கொண்ட ’யங் இந்தியன்’ என்ற நிறுவனத்துக்கு ஏஜேஎல் கைமாற்றப்பட்டது. இதன் மூலமாக பல்லாயிரம் கோடி சொத்துகளை சோனியா குடும்பம் மோசடியாக கைப்பற்றி இருப்பதாகவும், அதற்கான பரிவர்த்தனைகளில் கொல்கத்தா நிறுவனம் ஒன்றின் வாயிலாக ஹவாலா முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் புகார் படலத்துக்கு சுப்பிரமணியன் ஸ்வாமி பிள்ளையார் சுழியிட்டார். இந்தப் புகாரின் கீழான வருமானவரித் துறையின் வழக்கு நீதிமன்ற நிலுவையில் உள்ளது. அமலாக்கத் துறை வழக்கு ஒன்று அதன் விசாரணையின் தொடக்கத்திலேயே முடித்து வைக்கப்பட்டது. அதன் பின்னர் 7 ஆண்டுகளாக உறக்கத்திலிருந்த இந்த வழக்கிற்கு கரோனா காலத்தில் மீண்டும் உயிரூட்டப்பட்டது.

தேர்தல் சிறப்பு வழக்குகள்

உரிய முகாந்திரமின்றி எந்த வழக்கையும் அமலாக்கத்துறை கையில் எடுப்பதில்லை. மாநில காவல்துறை உள்ளிட்ட இதர விசாரணைகள் மற்றும் வழக்குப் பதிவுகளைப் பின்தொடர்ந்தே அமலாக்கத்துறையின் பிரவேசம் அமையும். ஆனால், அதன் விசாரணைகள் திடீரென வேகம் பெறுவதும், ஆட்சியாளர்களை திருப்திபடுத்தும் நோக்கிலேயே விசாரணையின் பாதை நீள்வதும், நோக்கம் நிறைவேறியதும் விசாரணை நடைமுறைகள் தொய்வடைவதுமே இந்த விசாரணை அமைப்பின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கி வருகின்றன.

உதாரணத்துக்கு, ஆம் ஆத்மி அமைச்சர் சத்யேந்திர ஜெயின், நவம்பரில் நடக்கவிருக்கும் இமாச்சலப் பிரதேச தேர்தலின் கட்சி பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பின்னரே அமலாக்கத் துறையின் கண்களை உறுத்தியிருக்கிறார். பணவீக்கம் முதல் சீனாவின் அத்துமீறல் வரை பிரதமர் மோடியை தர்மசங்கடத்தில் தள்ளும் ராகுலின் கேள்விக் கணைகளை அடக்கும் வகையிலும், ’ஊழல்வாத காங்கிரஸ்’ என்ற பாஜகவின் பழகிய குற்றச்சாட்டுக்கு வலுசேர்க்கவும் தற்போதைய ராகுல் - சோனியா மீதான அமலாக்கத்துறை விசாரணைகள் உதவுக்கூடும். காங்கிரஸ் கட்சிக்கு பெரும் தர்மசங்கடத்தை உருவாக்கும் இந்த வழக்கு விசாரணைகளால், பாஜக எதிர்பார்த்தபடியே குடியரசு தலைவர் வேட்பாளர் தேர்விலும் காங்கிரஸ் கவனம் சிதறியிருக்கிறது.

அமலாக்கத்துறை விசாரணைக்கு செல்லும் ராகுல் காந்தி...

அமலாக்கத்துறையின் அஸ்திரங்கள்

வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் உருவான அமலாக்கத்துறைக்கு, அடுத்துப் பொறுப்பேற்ற மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில்தான் அவசியமான சலுகைகள், அதிகாரங்கள் வழங்கப்பட்டன. பணமோசடி புகாரில் ஐபிசி 420 பிரிவில் கைதாவோருக்கு ஜாமீன் கிடைப்பது எளிது. இதே நபரை பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை கைது செய்தால் ஜாமீன் கிடைப்பது குதிரைக்கொம்பு! கிடுக்குப்பிடி கேள்விகளை எழுப்பி, பெறப்படும் பதில்களை வைத்தே வழக்கில் முழுதாய் முடக்கிப்போடுவது அமலாக்கத்துறையின் அலாதியான பாணி. அதனால்தான் ஜூன் 13 முதல் அமலாக்கத் துறை அலுவலக விசாரணைக்கு ஆஜராகி வரும் ராகுல் காந்தி, தனது பதில்களின் எழுத்துபூர்வ சரிபார்ப்புகளுக்காக தினத்துக்கு 10 மணி நேரம் அங்கேயே செலவிடுகிறார்.

பயங்கரவாத தொடர்பிருந்தால் மட்டுமே என்ஐஏ ஆராயும். மாநில அரசின் ஒப்புதல் பெற்ற பிறகே அங்கு நுழையும் சிபிஐ, அரசு அதிகாரிகளை கைது செய்யும் முன்னர் அரசிடம் உரிய அனுமதி கோரியாக வேண்டும். இதெல்லாம் அமலாக்கத்துறைக்கு பொருட்டில்லை. மேலும், அரசியல் கட்சியினர் மற்றும் மக்கள் பிரதிநிதிகளை அரசு மற்றும் நீதிமன்றத்தின் அனுமதியின்றி விசாரிக்கவும், கைது செய்யவும், அவசியமெனில் சோதனையிட்டு ஆவணங்கள் மற்றும் சொத்துகளை கைப்பற்றவும் அமலாக்கத்துறைக்கு விஷேச அதிகாரங்கள் உண்டு.

ஆட்சேப அதிகாரங்களை நீதிமன்றம் பறிக்குமா?

அமலாக்கத்துறையின் விசேஷ அதிகாரங்கள் மற்றும் ஆளும்கட்சிகளுக்கு ஏவலாக அவை மாறிப்போவதற்கு எதிராக நூற்றுக்கும் மேலான வழக்குகள் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. சாதாரண காவல்துறை வழக்காக சுருங்கும் புகார்கள்கூட, அரசியல் காரணங்களுக்காக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் போர்வையில் அமலாக்கத்துறையால் ஊதிப் புனையப்படுவதாகவும் இந்தப் புகார்கள் புலம்புகின்றன. அப்படியான சில வழக்குகளில் நீதிமன்றங்களின் அதிருப்தியையும் அமலாக்கத்துறை எதிர்கொண்டுள்ளது. அடுத்த மாதம் அமலாக்கத்துறை கையாண்ட வழக்குகளில் பத்துக்கும் மேற்பட்டவற்றின் தீர்ப்புகளை நீதிமன்றங்கள் வெளியிட இருக்கின்றன. அப்போது அமலாக்கத்துறையின் விசேஷ அதிகாரங்கள் குறித்த கூடுதல் கேள்விகள் நீதிமன்றத்தில் எழவும் வாய்ப்புள்ளது.

நீதிமன்றங்கள் கேள்வி எழுப்புகின்றனவா என்று பார்க்கலாம்!

x