உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு திருட்டு: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சிக்கிய காதல் ஜோடி


சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் செல்போனை திருடி கொண்டு தப்பி ஓட முயன்ற இளம்பெண்ணை பயணி ஒருவர் பொதுமக்கள் உதவியோடு பிடித்து ரயில்வே போலீஸில் ஒப்படைத்தார். ரயில்வே போலீஸார் அந்த பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது.

சென்னை ஆவடியை சேர்ந்தவர் ஜெயஸ்ரீ (21). தாயை இழந்த ஜெயஸ்ரீ பிளஸ்2 வரை படித்துள்ளார். அடிக்கடி சென்ட்ரல் ரயில் நிலையம் வந்து செல்வது வழக்கம். ஜெயஸ்ரீக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருவொற்றியூரை சேர்ந்த கொத்தனார் பார்த்திபன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இவர்களது நட்பு காதலாக மாறியது. இதனையடுத்து இருவரும் மற்ற காதல் ஜோடிகள் போல பீச், பார்க், சினிமா என ஊர்சுற்ற விரும்பினர். ஆனால் கையில் பணம் இல்லாததால் இவர்களால் ஆசைப்பட்டதுபோல் இருக்க முடியவில்லை. இதனால் இருவரும் சேர்ந்து சென்ட்ரல் ரயில் நிலையத்தில் செல்போன்களை திருட முடிவு செய்தனர். கடந்த சில நாட்களாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகள் சார்ஜ் போட வைத்திருந்த செல்போன்களை திருட ஆரம்பித்தனர்.

பின்னர் அதிகாலை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வரும் ரயில்களில் ஜன்னலோரம் அமர்ந்திருக்கும் பயணிகளின் செல்போன்களை திருடி உள்ளனர். திருடப்பட்ட செல்போன்களை கோயம்பேட்டில் உள்ள ஒரு செல்போன் கடையில் விற்று அதில் வரும் பணத்தை வைத்து இருவரும் சினிமா, பீச், பார்க் என பல இடங்களுக்கு சென்று சந்தோஷமாக இருந்துள்ளனர். இரவில் தங்குவதற்கு காதல் ஜோடி மீண்டும் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளனர்.

நேற்று காலை இதேபோல் பயணி ஒருவரிடம் ஜெயஸ்ரீ செல்போனை திருடியபோது போலீஸில் சிக்கியது தெரியவந்தது. ஜெயஸ்ரீ அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் காதலன் பார்த்திபனையும் கைது செய்த போலீஸார், அவர்களிடம் இருந்து 2 செல்போன்களை பறிமுதல் செய்து பின்னர் இருவரையும் புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

x