புறம்போக்கு நிலத்தில் பயிரிடுவதில் போட்டி!- சேற்றில் புரட்டி எடுக்கப்பட்ட பெண் ஊராட்சி மன்றத் தலைவர்!


அரசு புறம்போக்கு நிலத்தில் பயிர் செய்வது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோர் சேற்றில் இறங்கிச் சண்டையிட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம், வெங்கல் அருகே உள்ள அத்தங்கிகாவனூர் ஊராட்சி மன்ற தலைவராகப் பதவி வகித்து வருபவர் சாந்தி. இவர் அத்தங்கிகாவனூர் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் சுமார் 12 ஏக்கர் பரப்பளவில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் பணிகள் மேற்கொள்ள பிடிஓ அலுவலகத்தில் உத்தரவு பெற்றிருந்தார். இந்த நிலையில், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் தங்கராஜ் மற்றும் அவரது உறவினர்கள் பிடிஓ அலுவலகத்தில் அனுமதி பெற்ற இடத்தில் உழுது பயிர் செய்துள்ளனர்.

தகவல் அறிந்து சாந்தி, அவரது மகன் கவியரசு ஆகியோர் அப்பகுதிக்கு சென்றனர். அங்கிருந்த தங்கராஜிடம், “ இது அரசு புறம்போக்கு நிலம். இந்த நிலத்தில் பயிர் செய்வது சரியல்ல” எனக் கூறியுள்ளனர். இதனால் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் முற்றி ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். பயிரிடத் தயாராக உழுது வைத்திருந்த சேற்றில் இருதரப்பினரும் சண்டையிட்டனர்.

இந்த சம்பவம் குறித்து ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி, வெங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், காவல்துறையினர் ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதாகக் கூறி ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில், பொதுமக்கள் ஏராளமானோர் வெங்கல் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு தங்கராஜ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தங்கராஜ் உள்ளிட்டோரை அழைத்து விசாரணை மேற்கொள்வோம் என காவல்துறையினர் உறுதியளித்தனர். காவல்துறையினரின் பேச்சுவார்த்தையை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

x