`பைக் திருட வந்த எங்களை கட்டிவைத்து தாக்கினர்'- திருடனின் புகாரில் பொதுமக்கள் மீது வழக்கு பதிந்தது குமரி போலீஸ்


குமரிமாவட்டம், ஆரல்வாய்மொழியில் பைக்கை திருட வந்த திருடர்கள் கொடுத்த புகாரின் பேரில் பொதுமக்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கும் வினோதம் நிகழ்ந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி பகுதியில் அண்மைக்காலமாக தொடர் திருட்டுச் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் ஆரல்வாய்மொழி, தெற்கு பெருமாள்புரம் கன்னிவிநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்த சந்திரகுமார் என்பவரின் இருசக்கர வாகனத்தை நேற்று முன்தினம் நள்ளிரவில் இரண்டுபேர் திருட முயன்றனர். இதைப் பார்த்த சந்திர குமார் ஊர்மக்களின் உதவியோடு அவர்கள் இருவரையும் மடக்கிப் பிடித்தார். உடனே அந்த இருவரையும், அருகில் இருந்த மின்கம்பத்திலேயே ஊர்மக்கள் சேர்ந்து கட்டிவைத்துவிட்டு போலீஸிற்கு புகார் சொன்னார்கள். அப்போது அவர்கள் திருடர்களைத் தாக்கியதாகவும் தெரிகிறது. வாலிபர்கள் இருவரும் தங்கள் பெயர், முகவரியை சொல்லாமல் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைச் சொல்லி வந்தனர்.

நேற்று காலையில் ஆரல்வாய்மொழி போலீஸ் ஆய்வாளர் மீனா தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்தனர். போலீஸார், அப்போது கட்டிவைக்கப்பட்டிருந்த பைக் திருடர்களிடம் முதலில் விசாரணை நடத்தாமல், அவர்களை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றனர். மேலும் அவர்களைத் தாக்கியதாக பொதுமக்களையும் காவல்நிலைய விசாரணைக்கு அழைத்தனர். இதைக்கண்டித்து பொதுமக்கள் நாகர்கோவில்- திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் மறியலிலும் ஈடுபட்டனர்.

இவ்விவகாரத்தில் பைக்கைத் திருட வந்தவர்கள் தடிக்காரன்கோணம் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் மற்றும் ஜோசப் ராஜ் எனத் தெரியவந்தது. போலீஸார் அவர்களைக் கைது செய்தனர். இந்நிலையில் பைக் திருட்டு முயற்சியில் மூளையாகச் செயல்பட்ட ஜோசப்ராஜ் இன்று ஒரு புகார் கொடுத்தார். அதில், “நானும், என் நண்பன் ஆகாஷ்ம் பைக் திருட முயன்றோம். அப்போது அப்பகுதி பொதுமக்கள் எங்களைப் பிடித்து சரமாரியாக கட்டிவைத்துத் தாக்கினார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்”எனக் கூறப்பட்டுள்ளது. அதன்பேரில் நான்குபேர் மீது ஆரல்வாய்மொழி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

திருடனிடம் கூட புகார் பெற்று வழக்கு பதிவு செய்கிறார்களே. காவல்துறையின் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா என்கிறார்கள் இணையவாசிகள். ஆனால் காவல்துறைதரப்பிலோ, “பொதுமக்கள் உணர்ச்சி வேகத்தில் திருடர்களைத் தாக்குகிறார்கள். ஆனால் கைது செய்வதற்கு மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தும்போது போலீஸார் தாக்கியதாக நினைத்துக்கொள்ளும் அபாயம் உண்டு. இன்னொன்று அவர்களின் உடலில் எந்த அளவுக்கு உள்காயங்கள் இருக்கிறது என்பதும் தெரியாது. அதனால்தான், முன்னெச்சரிக்கையாக இப்படி வழக்கு பதிவு செய்யப்படுகிறது” என்கின்றனர்.

x