சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் திடீர் ரத்து: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தவித்த 2 ஆயிரம் பயணிகள்!


அக்னிபத் திட்டத்துக்கு எதிராக வட மாநிலங்களில் பல இடங்களில் வன்முறை வெடித்துள்ளதால் பெங்களூருவில் இருந்து சென்னை வழியாக வட மாநிலத்திற்கு செல்ல இருந்த சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் ரயில் திடீரென ரத்து செய்யப்பட்டது. இதனால், ரயிலில் வந்த 2 ஆயிரம் பயணிகள் தவித்தனர்.

இந்திய ராணுவத்தில் 4 ஆண்டுகள் மட்டுமே பணியாற்றும் வகையில் அக்னிபத் என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்தது. இந்த திட்டத்திற்கு பிஹார், ஜார்க்கண்ட், உத்தர பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட வடமாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதன் காரணமாக பல மாநிலங்களில் வன்முறை வெடித்ததுடன் பிஹார், தெலங்கானா உள்ளிட்ட பல இடங்களில் ரயிலுக்கு தீ வைத்த சம்பங்களும் அரங்கேறி வருகிறது. இந்நிலையில் பெங்களூருவிலிந்து சென்னை பெரம்பூர் வழியாக பிஹார் மாநிலம் தானாப்பூருக்கு செல்லும் சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் ரயில் பாதுகாப்பு கருதி சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது.

இதனால் ரயிலில் இருந்த 2 ஆயிரம் பயணிகள் செய்வதறியாது திகைத்து நின்றனர். மேலும் சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் ரயிலை அதிகாரிகள் மீண்டும் பெங்களூருக்கு திருப்பி அனுப்பி வைத்தனர். ஆனால் பெங்களூருவில் தங்கி வேலை பார்த்து வந்த வட மாநிலத்தவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல வேண்டி இருக்கும் இடத்தை காலி செய்துவிட்டு வந்த நிலையில் பிஹாருக்கு செல்லும் ரயில் ரத்தானதால் என்ன செய்வது என்று தெரியாமல் ரயில் நிலையத்திலேயே தங்கும் நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக சென்ட்ரல் ரயில் நிலையம் வட மாநிலத்தவர்களால் நிரம்பி வழிந்தது. பலர் நிலைமை சீரானதும், வடமாநிலங்களுக்கு செல்ல இருப்பதாக தெரிவித்தனர். ரயில் திருப்பி அனுப்பப்பட்ட சம்பவத்தால் சென்ட்ரல் ரயில் நிலையம் 11-வது நடைமேடையில் போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

இதுகுறித்து ரயில்வே பாதுகாப்பு படையின் மூத்த முதன்மை கோட்ட பாதுகாப்பு ஆணையர் செந்தில்குமரன் கூறுகையில், "வட மாநிலங்களில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக பிஹார் மாநிலம் தானாப்பூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் பாதுகாப்பு கருதி புறப்பட்ட இடமான பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டது. இதன் காரணமாக ரயில் நிலையத்தில் கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தங்கக்கூடிய வடமாநில பயணிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்து அவர்களும் பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள்" என்றார்.

x