இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்... அதிமுக நிர்வாகியின் பணம் திருட்டு: வாக்கி டாக்கியுடன் சிக்கிய போலி போலீஸ்காரர்!


காக்கி உடையில் வாக்கி டாக்கியுடன், பெண்ணை மிரட்டி பாலியல் தொந்தரவு செய்து பணம் பறிப்பில் ஈடுபட்ட போலி போலீஸ்காரர், அதிமுக நிர்வாகி காரில் 13 லட்ச ரூபாய் திருடியது தெரிய வந்துள்ளது.

சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்தவர் சதீஷ்(35). அதிமுக மாணவர் அணி மாவட்ட செயலாளரான இவர் கடந்த 13-ம் தேதி நண்பர்கள் அபிஷேக் ஜேக்கப், யாசின் ராஜா ஆகியோருடன் சேர்ந்து சேத்துப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தனது நண்பரின் குழந்தையைப் பார்க்கச் சென்றுள்ளார். அப்போது சதீஷ் வேலை நிமித்தமாக தான் கொண்டு வந்த 13 லட்சம் ரூபாயை காரில் வைத்து விட்டு நாளை பெற்றுக்கொள்வதாக கூறி வளசரவாக்கத்தில் இறங்கி சென்றார்.

பின்னர் அபிஷேக் ஜேக்கப் மற்றும் யாசின் ராஜா ஆகியோர் மருத்துவமனை கார் பார்க்கிங்கில் இருந்த தங்களது காரை நிறுத்தி விட்டு மருத்துவமனைக்கு சென்று வந்து பார்த்த போது காரில் இருந்த 13லட்ச ரூபாய் பணம் திருடு போனது தெரியவந்தது. இதனையடுத்து சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் அபிஷேக் புகார் அளித்தார். இதன் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது காக்கி பேண்ட் அணிந்து வந்த நபர் ஒருவர் காரைத் திறந்து 13லட்ச ரூபாயை திருடிச் சென்றது தெரியவந்தது.

உடனே சேத்துப்பட்டு போலீஸார், தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர். இத்திருட்டு தொடர்பாக புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த ஜமாலுதீன்(41) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது, பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

கடந்த 11-ம் தேதி ஜமாலுதீன் ஹாரிங்டன் சாலையில் காரில் தனது காதலருடன் இருந்த இளம்பெண்ணிடம் ஜமாலுதீன் தன்னைப் போலீஸ் எனக்கூறி மிரட்டி, அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். அத்துடன் அவரிடம் இருந்து 1000 ரூபாயை பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் வாக்கிடாக்கியுடன் காதலர்கள் அதிகம் வரும் இடங்களைத் தேர்வு செய்து குறிப்பாக பெசன்ட் நகர் கடற்கரை, மெரினா கடற்கரை, பூங்கா போன்ற இடங்களுக்கு சென்று, போலீஸ் என கூறி மிரட்டி பணப்பறிப்பில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. சென்னை முழுவதும் போலீஸ் எனக்கூறி பணப்பறிப்பில் ஈடுபட்டதாக ஜமாலுதீன் மீது 25-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவை இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரிடமிருந்து 3 லட்ச ரூபாயை போலீஸார் பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட ஜமாலுதீனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீஸார் சிறையில் அடைத்தனர். பாதிக்கப்பட்ட காதல் ஜோடியும் ஜமாலுதீன் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

x