வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக 50-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் ஒரு கோடிக்கும் மேலாக வசூல் செய்து ஏமாற்றியதாக பெண் ஒருவரை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கும்பகோணத்தை சேர்ந்தவர் மணிகண்டன் என்பர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில் , “ 'சேப் மூன் வேல்டு' என்ற பெயரில் போலி வேலைவாய்ப்பு அலுவலகம் நடத்தி இளைஞர்களுக்கு வேலை வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். வெளிநாட்டில் வேலைவாங்கி தருவதாக கூறி 50-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் 1 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்துள்ளார்கள். மோசடி செய்யும் நபர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் மத்திய குற்றப்பிரிவு வேலை வாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் கலாராணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இந்த புகாரில் தொடர்புடைய கொடுங்கையூர், டீச்சர்ஸ் காலனியை சேர்ந்த ஏஞ்சல் என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும் அவரின் அலுவலகத்திலிருந்து மோசடி செயலுக்கு பயன்படுத்தப்பட்ட கம்ப்யூட்டர், செல்போன் மற்றும் முக்கிய ஆவணங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், வெளிநாட்டு வேலை மோகத்தில் இருந்த 50 பேரிடம் தலா 3 லட்சம் பெற்று ஏமாற்றியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஏஞ்சல் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஏஞ்சலுடன் மோசடியில் ஈடுபட்ட மற்ற நபர்களையும் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் தேடிவருகின்றனர்.