லிப்ட் கொடுத்தவரிடம் கத்தியைக் காட்டி கார் கடத்தல்: பதற வைத்த 'பார்’ நட்பு!


மதுபோதையில் நண்பர்களாகப் பழகி பின்பு கத்தி முனையில் காரை கடத்தி சென்ற சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. காரை கடத்தியதாக ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், இருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

சென்னை, கொளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ்பாபு. இவர் கேளம்பாக்கம் - திருப்போரூர் பிரதானை சாலையில் உள்ள டாஸ்மாக் கடை அருகே உள்ள பாரில் கடந்த 13-ம் தேதி குடித்துக் கொண்டிருந்தார். அவருக்கு அடுத்த டேபிளில் மூன்று பேர் மது குடித்துக் கொண்டிருந்தனர். போதையிலிருந்த அவர்கள் ஒன்றாக அமர்ந்து மீண்டும் குடிக்கத் தொடங்கியுள்ளார்கள்.

இதன் பின் அவர்கள் நான்கு பேரும் அங்கிருந்து வெளியே வந்தனர். அப்போது தங்கள் மூவரையும் வழியில் இறக்கி விடுமாறு கால்டாக்சி ஓட்டுநர் ரமேஷ் பாபுவிடம் தெரிவித்துள்ளனர். இவரும் அவர்களை காரில் ஏற்றிக் கொண்டு சென்றுள்ளார்.

அப்போது அவர்கள் திடீரென கத்தியைக் காட்டி மிரட்டி, ரமேஷ் பாபுவை தாக்கியுள்ளனர். மேலும் அவரை காரிலிருந்து இறக்கி விட்டுவிட்டு காரை எடுத்துக் கொண்டு தலைமறைவாகினர். இதனால் அதிர்ச்சி அடைந்த ரமேஷ்பாபு கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து காவல்துறையினர் சாலைப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர். இதைத் தொடர்ந்து கேளம்பாக்கம் அடுத்த தையூர் பகுதியைச் சேர்ந்த ராகுல் என்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த தகவலை அறிந்த அவரின் கூட்டாளிகள் கணேஷ் மற்றும் நிவேதன் ஆகிய இருவரும் படூர் அருகே சாலை ஓரத்தில் காரை நிறுத்திவிட்டுத் தலைமறைவாகினர். தகவல் அறிந்த கேளம்பாக்கம் போலீஸார் காரை கைப்பற்றிக் காவல் நிலையத்திற்குக் கொண்டு வந்தனர். தப்பியோடிய அவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

x