எம்எல்ஏ-க்களுக்கு எச்சரிக்கை... கெடு விதிக்கும் கேசிஆர்: என்ன நடக்கிறது தெலங்கானாவில்?


இந்திய ஜனநாயகம் என்னென்னவோ மாற்றங்களைக் கண்டு வருகிறது. அவற்றில் முக்கியமானது தேசிய கட்சிகள் வலுவாக இல்லாத மாநிலங்களில் மாநிலக் கட்சிகள் வலுவாகி வருவது. அவற்றிலும் முதலமைச்சர் அல்லது கட்சித் தலைவருடைய குடும்பமே அதிகார மையமாக இருப்பது ஏறத்தாழ அனைத்து மாநிலங்களிலும் மரபாகி வருகிறது. மாநிலக் கட்சித் தலைவர்களின் குடும்பம் மட்டுமல்ல, ஆளும்கட்சியின் சட்டப் பேரவை உறுப்பினர்களுடைய குடும்பங்களும்கூட கட்சிப்பணிகளில் தீவிரம் காட்டுகின்றன. சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுடைய பலமும் பலவீனமும் அவரவர் குடும்பத்தார்தான். தேர்தல் சமயத்தில் ஓடியாடி வேலை செய்யவும் ஆதரவு திரட்டவும் வாக்குகளைச் சேகரிக்கவும் சொந்தக்காரர்களைப் போல நம்பகமான ஆட்கள் கட்சிக்குள் மிக அபூர்வமாகத்தான் கிடைப்பார்கள். எனவே எல்லா சட்டமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் குடும்ப உறுப்பினர்களைத் தீவிர அரசியலில் இழுத்துவிட்ட பிறகே வெற்றி பெறுகின்றனர்.

ஆந்திரம், தமிழ்நாடு, கேரளம், மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ராஜஸ்தான், குஜராத், மேற்கு வங்கம், ஹரியாணா, பஞ்சாப், இமாசலம், ஜம்மு-காஷ்மீர் என்று எந்த மாநிலமும் குடும்ப ஆதிக்க அரசியலுக்கு விதிவிலக்கு இல்லை.

தெலங்கானாவில் முதலமைச்சர் கே. சந்திரசேகர் ராவின் (கேசிஆர்) மகன், மகள் உள்பட பலர் அரசிலும் கட்சியிலும் உயர் பதவி வகிக்கின்றனர். அவரது தெலங்கானா ராஷ்ட்ர சமிதி கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் அடுத்த வாரம் நடைபெறவிருக்கிறது. அப்போது கட்சியின் 35 சட்டப் பேரவை உறுப்பினர்களை முதல்வர் சந்திரசேகர ராவ் தனியாக அழைத்து, அவர்கள் செயல்படும் முறைகளை மாற்றிக்கொள்ளுமாறு எச்சரிக்கப் போகிறார். அடுத்த ஆறு மாதங்களில் அவர்கள் தங்களுடைய சோம்பல், மெத்தனம், அலட்சியம் ஆகியவற்றைக் கைவிட்டுவிட்டு மக்களிடமும் கட்சித் தொண்டர்களிடமும் நெருங்கிப்பழகி அவர்களுடைய குறைகளைத் தீர்க்காவிட்டால் 2023 சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட கட்சி வாய்ப்பு தராது என்று அவர்களிடம் கண்டிப்புடன் கூறப் போகிறார் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆனால், இதையெல்லாம் வைத்து அவர்கள் மாறிவிடுவார்கள் என்று நிச்சயம் கூற முடியாது. காரணம் ஏற்கெனவே இப்படி ஆறு மாதங்களுக்கொரு முறை எச்சரிக்கப்பட்டவர்கள்தான் அவர்கள் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதே வேளையில், அந்த உறுப்பினர்களின் குடும்பத்தில் வேறு யாராவது கட்சிக்கு விசுவாசமாகவும் தொகுதியில் சுறுசுறுப்பாகவும் செயல்படுகிறவர்கள் இருந்தால் அவர்களை அடையாளம் கண்டு, அவர்களைப் பற்றிய விவரங்களைக் கட்சி மேலிடத்துக்குத் தெரிவிக்குமாறு மாவட்டத் தலைமை கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது. தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யும்போது மாற்று வேட்பாளர் (டம்மி) தயாராக இருப்பார். ஏதாவதொரு காரணத்துக்காக அதிகாரபூர்வ வேட்பாளருடைய மனு நிராகரிக்கப்பட்டால் மாற்று வேட்பாளர் மனு ஏற்கப்படும் பட்சத்தில் அவர் களம் இறக்கப்படுவார். இப்படி டம்மி வேட்பாளராக வேறு யாரையோ இறக்குவதைத் தவிர அவரவர் குடும்பத்தைச் சேர்ந்தவரையே பயன்படுத்த கேசிஆர் திட்டமிடுவதிலும் ஒரு சூட்சுமம் இருக்கிறது.

தேர்தலில் போட்டியிட ஒரு தொகுதியில் அதிக எண்ணிக்கையுள்ள வாக்காளர்களின் சாதி அல்லது சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான் பெரும்பாலும் எல்லா அரசியல் கட்சிகளிலும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மதச்சார்பற்ற, இடதுசாரி, முற்போக்குக் கட்சிகள்கூட இதற்கு விதிவிலக்கல்ல. ஏற்கெனவே பேரவை உறுப்பினருடைய குடும்பத்தவர்தான் வேட்பாளர் என்பதால் பெரும்பான்மை சாதி அல்லது சமூகத்துக்கு அதிருப்தி ஏற்பட வாய்ப்பில்லை. ‘உங்கள் குடும்ப உறுப்பினரைத்தானே நிறுத்துகிறோம்’ என்று சொல்லி வாய்ப்பு மறுக்கப்படும் பேரவை உறுப்பினரையும் சமாதானப்படுத்த முடியும். அப்படி குடும்பத்தில் சரியான வேட்பாளர் கிடைக்காவிட்டால், மாவட்டத் தலைமையே மாற்று ஏற்பாட்டையும் அறிக்கையாக அளித்துவிடும். கடைசி நேரம் வரை காத்திருக்க வேண்டியதில்லை.

ஆளும் கட்சியில் 35 உறுப்பினர்கள்தான் அதிருப்தியான சேவையைத் தருகிறார்களா என்று ஆச்சரியப்பட வேண்டும். கேசிஆருக்குத் தேர்தல் ஆலோசகராகச் செயல்பட்ட பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவனம் முதல் தொகுதியாக 70 உறுப்பினர்களின் நிலையை ஆராய்ந்தது. அதில் 35 பேர் மீது தொகுதியில் அதிருப்தி நிலவுவதை அறிக்கையாக அளித்திருக்கிறது. இப்படி அவர்கள் மீது அறிக்கை தரப்படுவது இது முதல் முறையல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது. அதாவது அவர்கள் வெற்றி பெற்றதிலிருந்தே இப்படித்தான் இருந்து வருகின்றனர். எனவேதான் இன்னும் ஆறு மாதம்தான் என்று கெடு விதிக்கப்போகிறார் கேசிஆர்.

தெலங்கானா ராஷ்ட்ர சமிதி வெற்றி பெறாத 16 தொகுதிகளில்கூட, கட்சிக்காரர்களின் தொகுதிப் பணி எப்படி என்று ஐ-பேக் நிறுவனம் தனி அறிக்கைகள் தயாரித்துள்ளது. வாங்குகிற பணத்துக்கு வஞ்சனையில்லாமல் உழைக்கும் நிறுவனமாக இருக்கிறது. இன்னும் 49 தொகுதிகளில் ஆளும் கட்சிக்காரர்களின் செயல்பாடுகள் பற்றிய அறிக்கைகளும் தயாராகின்றன.

இதற்கெல்லாம் எதற்கு இன்னொரு நிறுவனத்தை நாட வேண்டும், கட்சிக்காரர்களே இதையெல்லாம் தலைமையிடம் சொல்ல மாட்டார்களா என்று கேட்கத் தோன்றும். கட்சிக்காரர்கள் அந்தக் காலத்தைப் போல அண்ணன் – தம்பி பாச உணர்வோடு இருப்பதில்லை. சுயநலத்தோடும் பாரபட்சத்தோடும் கைச்சரக்கு கலந்தும் சக நிர்வாகிகள், தொண்டர்கள் பற்றி மற்றவர்கள் தகவல்களைத் தருவதை எல்லா அரசியல் கட்சித் தலைவர்களும் தொடர்ந்து பார்த்து வருகின்றனர். அதனால்தான் தங்களுடைய கட்சியைச் சாராத ஆலோசக நிறுவனத்திடம் இந்தப் பணிகளை ஒப்படைக்கின்றனர்.

எது எப்படியோ, தொகுதிப் பிரச்சினைகளைத் தீர்க்காவிட்டால், கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் அடுத்த தேர்தலில் தோல்வி நிச்சயம் என்று ஆளுங்கட்சித் தலைவர்கள் அஞ்சுவதே நம்முடைய ஜனநாயகத்தின் பலம். வேலைவாய்ப்புகளைத் தனியார் துறையால்தான் அளிக்க முடியும். அந்த வகையில் ஐ-பேக் போன்ற நிறுவனங்கள் பெருகுவதும் பலருடைய வீடுகளில் உலை கொதிக்க உதவும். எனவே இவற்றையும் வரவேற்போம்.

x