மதுரை மத்திய சிறையில் இருந்து ஆயுள் கைதி எஸ்கேப்: அதிகாரிகள் அதிர்ச்சி!


கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த கைதி மதுரை மத்திய சிறையில் இருந்து தப்பி ஓடிய நிலையில், கவனக்குறைவாக இருந்த காவலரை பணியிடை நீக்கம் செய்து சிறைக் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.

தேனி மாவட்டம் தாமரைக்குளம் கவிஞா் கண்ணதாசன் தெருவைச் சேர்ந்தவர் ஆதி என்ற அருண்குமாா் (49). இவா் ஈரோடு மாவட்டம் சித்தோடு காவல் நிலையத்துக்குற்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஈரோடு மாவட்ட நீதிமன்றம் அருண்குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து கடந்த 2021 அக்டோபா் 20-ம் தேதி தீா்ப்பளித்தது.

இதையடுத்து, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அருண்குமாா், அங்கு தோட்ட வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளாா். இதில், சிறை அதிகாரிகளின் நம்பிக்கையைப் பெற்றதால் சிறையின் வெளிப்புறம் உள்ள பகுதிகளில் அருண்குமாரை தோட்ட வேலைகளில் ஈடுபடுத்தி வந்துள்ளனா்.

இந்நிலையில், நேற்று சிறையின் வெளிப்புற வளாகத்தில் உள்ள தோட்டத்தில் அருண்குமாா் வேலை பாா்த்துக் கொண்டிருந்தபோது திடீரென அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவானாா். இதனால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து தப்பியோடிய அருண்குமாரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிறைத்துறையினர் அளித்த புகாரின் பேரில் கரிமேடு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், பணியில் கவனக்குறைவாக இருந்ததாக சிறைக்காவலா் பழனிகுமாரை சஸ்பெண்ட் செய்து இன்று சிறை கண்காணிப்பாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மதுரை சிறையில் இருந்து ஆயுள் கைதி தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x