ராணுவத்தில் 4 ஆண்டுகள் மட்டுமே பணிசெய்யும் 'அக்னிபாத்' திட்டத்திற்கு எதிராக நாட்டில் பெரும்பாலான மாநிலங்களில் இன்று போராட்டம் பரவியது. பல மாநிலங்களில் ரயிலுக்கு தீவைக்கப்பட்டதால் 200-க்கும் மேற்பட்ட ரயில்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 35 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பிஹாரில் நேற்று பல இடங்களில் ரயில் பெட்டிகளுக்கு தீவைத்த சம்பவங்கள் நடந்தன. நேற்று நவாடாவில் உள்ள பாஜக அலுவலகத்துக்கு தீவைக்கப்பட்டது. மேலும், பாஜகவை சேர்ந்த பிஹார் துணை முதல் ரேணு தேவியின் வீட்டின் மீதும் போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினார்கள். இந்த நிலையில், மாதேபுராவில் உள்ள மற்றொரு பாஜக அலுவலகத்துக்கு இன்று தீவைக்கப்பட்டது.
உபியிலும் பல இடங்களில் இன்று போராட்டம் தீவிரமடைந்தது. பலியாவில் உள்ள ரயில் நிலையத்துக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் ரயிலுக்கு தீவைத்தனர். இதனால் அப்பகுதியே போர்க்களமானது. மேலும், பல்வேறு மாவட்டங் களிலும் போராட்டக்காரர்கள் பொது சொத்துக்களுக்கு தீவைப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டுவருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
தெலங்கானா மாநிலம் செகந்திராபாதில் உள்ள ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரயில் மீது கற்களை வீசி தாக்கிய போராட்டக்காரர்கள், அங்கும் ரயில் பெட்டிகளுக்கு தீவைத்தனர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார், 13 பேர் காயமடைந்தனர், ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சையில் உள்ளார்.
அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக ஒடிசா மாநிலத்திலும் கட்டாக் உள்ளிட்ட பல நகரங்களில் போராட்டங்கள் வெடித்தது. இந்த போராட்டத்தின்போது ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகம் உள்ளிட்ட பல பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டது. இதனால் காவல்துறையினர் தடியடி நடத்தி போராட்டக்காரர்களைக் கைது செய்தனர். இந்த நிலையில், ராணுவத் தேர்வுகளுக்கு தயாராகி வந்த பாலசோர் மாவட்டத்தைச் சேர்ந்த தனஞ்செய் என்ற இளைஞர் தற்கொலை செய்துகொண்டார்.
இதைப்போலவே ஹரியாணா மத்தியப்பிரதேசம், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களிலும் அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக போராட்டம் வலுவடைந்துள்ளது. இம்மாநிலங்களில் போராட்டக்காரர்கள் சாலைமறியல், அரசு வாகனங்களுக்கு தீவைப்பு போன்ற பல செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான போராட்டங்களால் இதுவரை 200-க்கும் மேற்பட்ட ரயில்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 35 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. தற்போதைய போராட்டங்களால் பீஹார், ஜார்கண்ட் மற்றும் உபியின் சில பகுதிகளை உள்ளடக்கிய கிழக்கு மத்திய ரயில்வே (ECR) மிகவும் மோசமாக பாதிக்கப் பட்டுள்ளது.