விசாரணை கைதி ராஜசேகரின் உடல் 4 நாட்களுக்கு பிறகு ஒப்படைப்பு: பிரேத பரிசோதனை வீடியோ முழுமையாக இல்லை என புகார்


கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணை கைதி ராஜசேகர் கடந்த 12-ம் தேதி சந்தேகமான முறையில் உயிரிழந்தார். இதனையடுத்து கொடுங்கையூர் காவல் ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் பொன்ராஜ் உட்பட 5 காவலர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். பின்னர் இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டு விசாரணை அதிகாரியாக சசிதரன் நியமிக்கப்பட்டார்.

மேலும் ராஜசேகரின் பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் பிரேத பரிசோதனை வீடியோ வழங்கினால் மட்டுமே அவரது உடலை வாங்குவோம் என அவரது தாயார் உஷா தெரிவித்திருந்தார். இந்நிலையில் ராஜசேகரின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது. காவல்துறை தாக்கியதால் ராஜசேகர் இறக்கவில்லை என கூடுதல் ஆணையர் அன்பு தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து ராஜசேகரின் பிரேத பரிசோதனை வீடியோ ராஜசேகரின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

நான்கு நாட்களாக சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ள ராஜசேகரின் உடலை பெற்றுக்கொள்ள ராஜசேகரின் தாயார் உஷா , குடும்பத்தினர் மற்றும் காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டமைப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆசீர் உள்ளிட்டோர் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு இன்று வந்தனர்.

பின்னர் உடலை பெறுவதற்கான சான்றிதழில் ராஜசேகரின் தாயார் உஷா கையெழுத்திட்டார். அப்போது ராஜசேகர் இறப்பு சான்றிதழில் பட்டியலினத்தோர் பிரிவுக்கு பதிலாக வேறு பிரிவு மாற்றி இருப்பதாக காவல் துறையிடம் ராஜசேகரின் தாயார் கோரிக்கை வைத்தார். இதனையடுத்து மாஜிஸ்திரேட் லட்சுமி, பட்டியலினத்தோர் பிரிவு என மாற்றி தருவதாக கூறியதால் ராஜசேகரின் உடலை குடும்பத்தினர் பெற்றுக்கொண்டனர்.
இதன் பின்னர் ராஜசேகரின் உடலை அவரது சொந்த ஊரான திருவள்ளூர் மாவட்டம் அலமாதிக்கு கொண்டு சென்றனர். மேலும் ராஜசேகரின் பிரேத பரிசோதனை வீடியோ முழுமையாக இல்லை எனவும், இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாகவும் காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆசீர் தெரிவித்துள்ளார்.

சிபிசிஐடி விசாரணை தொடங்கியது

சிபிசிஐடி காவல் ஆய்வாளர் சில்வின் சாந்தகுமார் தலைமையிலான போலீஸார், சம்பவம் நடந்த கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு சென்று ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதே போல ராஜசேகர் உடல்நிலை பாதிக்கப்பட்ட போது அனுமதிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைக்குச் சென்று விசாரணை நடத்த உள்ளனர்.

x