மனைவிக்கு 3 மாடி பங்களா… பெண் தோழியுடன் இன்பச்சுற்றுலா: கவரிங் நகையால் சிக்கிய வாலிபர்!


கவரிங் நகைகளை அடகுவைத்து அந்த பணத்தில் மனைவிக்கு மூன்று மாடி பங்களாவும், தனது பெண் தோழிக்கு சொசுகு கார், இன்பச்சுற்றுலா என ஏகபோகம் காட்டிய வாலிபர் கன்னியாகுமரியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் முதலார் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் சித்திரங்கோடு பகுதியில் நகை அடகுக்கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் காவியா என்பவர், சுரேஷ் இல்லாத நேரத்திற்கு அடகுக்கடைக்கு வந்துள்ளார். 9 கிராம் எடை கொண்ட வளையல் ஒன்றை 30 ஆயிரம் ரூபாய்க்கு அடகு வைத்து பணத்தைப் பெற்றுச் சென்றுள்ளார்.

இதன் பின் கடைக்கு வந்த சுரேஷ் அடகு பெறப்பட்ட நகையை சரிபார்த்துள்ளார். ஒரு வளையலை சோதித்த போது அது போலி வளையல் என்பது தெரியவந்தது. தனது கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை சுரேஷ் ஆய்வு செய்தார்.

அப்போது சொகுசு காரில் ஒரு ஆணுடன் வந்து இறங்கிய காவியா என்று சொன்ன பெண் போலி வளையலை அடகு வைத்தது தெரிய வந்தது. இதுகுறித்து கொற்றிக்கோடு காவல் நிலையத்தில் சுரேஷ் புகாரளித்தார்.

இந்த நிலையில் போலீஸார் நேற்று வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக வந்த சொசுகு காரை நிறுத்தி விசாரித்தனர். அதில் இருந்த வாலிபர் முன்னுக்குப் பின் முரணாக பேசினார். இதையடுத்து அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் நாகர்கோவில் செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த முடி திருத்தும் தொழிலாளியான ஜேசுராஜா எனத் தெரிய வந்தது.

செட்டிகுளம் பகுதியில் சலூன் கடை நடத்தி வரும் ஜேசுராஜாவுக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். கஷ்டப்பட்டு வந்த அவர் குறுக்கு வழியில் கோடீஸ்வரனாக இரண்டு வருடத்திற்கு முன் திட்டமிட்டார். கணவனை இழந்து 2 குழந்தைகளுடன் வறுமையில் வாழ்ந்து வந்த செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த அனுஷா என்பவருடன் ஜேசுராஜாவிற்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் சேர்ந்து கேரளாவில் இருந்து கவரிங் நகைகளை வாங்கி வந்து சிறிய அடகுக்கடைகளில் வைத்து பணம் பெற்றது தெரிய வந்தது.

இதற்கு நகையை அடகு வைக்க அனுஷாவை அவர் அனுப்பி மோசடி செய்தது விசாரணையில் தெரிய வந்தது.
இப்படி போலி நகைகளை அடகு வைத்து மனைவிக்கு மூன்று மாடி பங்களாவும், அனுஷாவிற்கு சொகுசு கார், இன்பச் சுற்றுலா என சொசுகு வாழ்க்கையாக வாழ்ந்ததும் தெரிய வந்தது. கடந்த 3 நாட்களில் 7 அடகுக்கடைகளில் போலி வளையல்களை வைத்து பல லட்ச ரூபாய் பெற்றதும், வேர்கிளம்பி கடையில் காவியா என்ற பெயரில் அனுஷா நகையை அடகு வைத்த போது ஜேசுராஜா சிக்கியதும் அவரது வாக்குமூலத்தில் தெரிய வந்தது. இதையடுத்து அவர் வந்த சொகுசு காரை பறிமுதல் செய்ததோடு, ஜேசுராஜாவை போலீஸார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அனுஷாவை தேடி வருகின்றனர். இவர்கள் இருவரும் தமிழகம் முழுவதும் இந்த மோசடியில் ஈடுபட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

x