எந்தவித ஏலமும் இன்றி ஒப்பந்தம்: அதானி நிறுவனத்திற்கு எதிராக இலங்கையில் வெடித்த போராட்டம்


இலங்கை மன்னாரில் இந்தியாவின் அதானி குழுமத்தினால் மேற்கொள்ளப்படவுள்ள 500 மெகாவாட் காற்றாலை திட்டத்திற்கு எதிராக அந்நாட்டின் தலைநகர் கொழும்புவில் போராட்டம் நடைபெற்றது.

இந்த காற்றாலை திட்டத்தை அதானி குழுமத்திற்கு வழங்க இந்திய பிரதமர் மோடி அழுத்தம் கொடுத்ததாக அதிபர் கோத்தபய ராஜபக்ச தெரிவித்ததாக, இலங்கை மின் வாரிய தலைவர் கூறியதை அடுத்து இலங்கையில் சலசலப்பு தொடங்கியது.

நேற்று நடந்த போராட்டத்தின் போது, அதானி குழுமத்திற்கு இந்த திட்டத்தை வழங்கியதில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று குற்றம்சாட்டிய போராட்டக்காரர்கள், இது தொடர்பான பதாகைகளை ஏந்தி அதானி நிறுவனத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச ஆகியோருக்கு இடையேயான சந்தேகத்திற்குரிய ஒப்பந்தத்தினால் போட்டி ஏலம் இல்லாமல் இந்த மின் திட்டம் அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்டது என்று போராட்டம் நடத்தியவர்கள் குற்றம் சாட்டினர்.

அதானி குழுமம் இந்த காற்றாலை திட்ட ஒப்பந்தத்தை எந்தவித ஏலமும் இன்றி பெறுவதற்காக இலங்கை நாடாளுமன்றம் மின்சாரச் சட்டத்தில் திருத்தத்தை நிறைவேற்றியது என்று குற்றம் சாட்டிய போராட்டக்காரர்கள், ட்விட்டர் மற்றும் சமூக ஊடகங்களிலும் இது தொடர்பான பதிவுகளை ட்ரெண்ட் செய்தனர்.

சில வாரங்களுக்கு முன்பு நடந்த நாடாளுமன்றக் குழு விசாரணையின்போது இலங்கை மின்சார வாரியத்தின் தலைவராக இருந்த எம்.எம்.சி. பெர்டினாண்டோ, காற்றாலை மின் திட்டத்தை நேரடியாக அதானி குழுமத்திற்கு வழங்குமாறு இந்திய பிரதமர் மோடி அழுத்தம் கொடுத்ததாக அதிபர் கோத்தபய ராஜபக்ச தன்னிடம் தெரிவித்ததாகக் கூறியதை அடுத்து இந்த சர்ச்சை தொடங்கியது. இதனை கோத்தபய ராஜபக்ச கடுமையாக மறுத்த பின்னர் ஃபெர்டினாண்டோ இந்த கருத்தை திரும்பப் பெற்றார். ஆனாலும் இலங்கையில் இந்த சர்ச்சை ஓயாமல் தொடர்ந்து கொண்டுள்ளது.

x