உ.பி நெரிசல் பலி 134 ஆக அதிகரிப்பு; சம்பவ இடத்தில் உயர் அதிகாரிகள் ஆய்வு


புதுடெல்லி: உத்தரப் பிரதேசம் ஹாத்ரஸ் சம்பவத்தில் பலி எண்ணிக்கை 134 ஆக அதிகரிதுள்ளது. இந்தநிலையில், கூட்டம் நடந்த நிகழ்விடத்தில் புதன்கிழமை காலை மாநில காவல் உயர் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இந்த துயர சம்பவத்துக்கு காரணமான போலே பாபா தலைமறைவாகி உள்ளார். அவரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.

ஹாத்ரஸ் மாவட்டத்தின் சிக்கந்தராராவ் தாலுகாவின் முகல்கடி கிராமத்தில் ஆன்மிகக் கூட்டம் நடைபெற்றது. இதை சாக்கார் நாராயண் சாகர் விஷ்வ ஹரி என்பவர் நடத்தி இருந்தார். ஆன்மிகக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு பலியானோர் எண்ணிக்கை 134 ஆக அதிகரித்துள்ள நிலையில் அந்த கோர விபத்து குறித்து மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

வெறும் 48 போலீஸார்.. சிறிய அளவிலானக் கூட்டம் எனக் கூறி ஹாத்ரஸ் மாவட்ட அரசு நிர்வாகத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. கூட்டத்துக்கு ஏற்ற வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் முறையாக செய்யப்படவில்லை. உ.பி காவல்துறை தரப்பில் வெறும் 48 போலீஸார் பாதுகாப்பு பணிக்கு அமர்த்தப்பட்டிருந்தனர்.

கூட்டத்தின் முக்கிய நிர்வாகத்தை போலே பாபாவின் சீடர்கள் மேற்கொண்டனர். போலே பாபா சீடர்களில் சுமார் 12,500 பேர் கூட்டத்தின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மதியம் சுமார் 3.00 மணிக்கு கூட்டம் முடிந்தவுடன், முதல் நபராக போலே பாபா கிளம்பியுள்ளார். அவர் வெளியில் சென்ற பின் பக்தர்கள் வெளியேறலாம் என அறிவிக்கப்பட்டது. அப்போது, பாபாவின் பாதங்களில் ஆசிர்வாதம் பெற பக்தர்கள் முண்டியடித்தனர். அந்த சமயத்தில்தான் சிலர் கீழே விழுந்தது தெரியாமல் கூட்டத்தினர் மிதித்தபடி முந்தியுள்ளனர். இதனால், தொடர்ந்து வந்தவர்களும் கீழே விழுந்து, நெரிசல் ஏற்பட்டுள்ளது.

பிறகு கூச்சல், குழப்பத்துடன் கூட்டத்தினர் வெளியேறியபோதும் வாசல்களில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக பக்தர்களில் பலரும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழத் துவங்கினர். சில நிமிடங்களில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

கண்டுகொள்ளாத போலே பாபா: தனக்காக கூடியப் பக்தர்களை பற்றி கவலைப்படாமல் போலே பாபா சொகுசு வாகனத்தில் அங்கிருந்து கிளம்பியுள்ளார். சம்பவத்தை போன் மூலம் கேள்விப்பட்டு அவர் திரும்பி வரவும் இல்லை. தனக்காக பலியான பக்தர்களை காண அந்த போலே பாபா, மருத்துவமனைகளுக்கும் செல்லவில்லை. மாறாக, தலைமறைவானவர் தன் செல்போனையும் அணைத்து வைத்துக் கொண்டார்.

போலே பாபா இன்னும் கைது செய்யப்படவில்லை. அவர் எங்கிருக்கிறார் என்று தெரியாத சூழலில் போலீஸார் ஆசிரமத்தில் சோதனை மேற்கொண்டனர். இதனை ஒட்டி போலே பாபா ஆசிரமத்தின் முன் அவரது ஆதரவாளர்கள் திரண்டனர். அதேபோல், ஹாத்ரஸ் நிகழ்விடத்தில் தடயவியல் நிபுணர் குழு, மோப்ப நாய்கள், உத்தர பிரதேச ஆயுதப்படை காவல் பிரிவினர், மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் குவிந்துள்ளனர்.

பலி அதிகரிப்பு: இதனிடையே இந்த துயரச் சம்பவத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 134 ஆக உயர்ந்திருப்பதாக உத்தரப் பிரதேச தலைமை செயலாளர் மனோஜ் குமார் சிங் தெரிவித்துள்ளார். இவர்களில் 126 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வழக்குப் பதிவு: ஹாத்ரஸ் ஆன்மிக கூடல் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் முதல் தகவல் அறிக்கையின்படி 80 ஆயிரம் பேர் கூடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் 2.5 லட்சம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். கட்டுக்கடங்காத கூட்டம் ஒரே நேரத்தில் நிகழ்விடத்தில் இருந்து வெளியேறியதால் விபத்து நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரதிய நியாய சன்ஹிதா சட்டப்பிரிவு 105, 110, 126 (2), 223 மற்றும் 238-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

இக்கூட்டத்தில் அப்பகுதியை சுற்றியுள்ள கிராமவாசிகள் சுமார் 1.25 லட்சம் பேர் கூடியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள். உழைக்கும் வர்கத்தினரான இவர்கள் அனைவரும் போலே பாபாவிடம் வந்தால் தம் வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கூட்டத்துக்கு வந்துள்ளனர்.

அனைவரது நம்பிக்கையும் வீணாகக் காரணமான போலே பாபா மட்டும் பிரச்சனையின்றி அங்கிருந்து தப்பியுள்ளார். அப்பாவி கிராமவாசிகள் தம் உறவுகளை இழந்து தவிப்பதுடன் அவர்கள் வாழ்க்கை மேலும் சிக்கலுக்கு உள்ளாகி விட்டது.