அசாமில் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக மாநிலம் முழுவதும் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அசாம் ஆறுகளில் பெருக்கெடுத்தோடும் வெள்ளம் காரணமாக நான்கு பேர் உயிரிழந்தனர்.
அசாமில் 25 மாவட்டங்களில் குறைந்தது 11 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், புதிதாக உருவாக்கப்பட்ட பஜாலி மாவட்டம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது எனவும், பிரம்மபுத்திரா மற்றும் கௌரங்கா ஆறுகளின் நீர்மட்டம் பல பகுதிகளில் அபாய அளவை தாண்டியுள்ளதாகவும் அசாம் பேரிடர் மீட்புப்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அசாமில் வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் 19,782 ஹெக்டேர் விளைநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மாநில அரசின் தரவுகளின்படி, 72 வருவாய் வட்டங்களுக்கு உட்பட்ட 1,510 கிராமங்கள் தற்போது நீரில் மூழ்கியுள்ளன. மருத்துவ அவசரம் இல்லாவிட்டால் மக்கள் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என்று வெள்ளம் பாதித்த மாவட்ட நிர்வாகங்கள் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.
அசாம் தலைநகர் கவுகாத்தியின் பெரும்பாலான பகுதிகள் தொடர்ந்து மூன்றாவது நாளாக தண்ணீர் தேங்கியுள்ளதால் நிலச்சரிவு ஏற்பட்டு இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்துள்ளது. அசாம் பள்ளத்தாக்கில் உள்ள ரங்கியா பிரிவின் நல்பாரி மற்றும் கோக்ராபர் இடையே தண்டவாளத்தில் அதிகளவில் தண்ணீர் தேங்கியதைத் தொடர்ந்து சுமார் 10 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அசாம் மட்டுமின்றி, மேகாலயா மற்றும் அருணாசல பிரதேசத்திலும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேகாலயாவில் நிலச்சரிவு, மின்னல் மற்றும் திடீர் வெள்ளம் காரணமாக 5 பேர் உயிரிழந்துள்ளனர். அசாம் மற்றும் மேகாலயாவில் புதன்கிழமை வரை இயல்பைவிட 272 மிமீ கூடுதல் மழை பெய்துள்ளது. இரு மாநிலங்களுக்கும் இந்த வார இறுதி வரை ரெட் அலர்ட் நீட்டிக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.