ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் ஆட்சியில் வறுமை தலைதூக்கியுள்ள நிலையில், வேலையை இழந்த பத்திரிகையாளர் ஒருவர், தெருவோரத்தில் சமோசா விற்பனை செய்து குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். இந்த புகைப்படம் அனைவரையும் கண்கலக்க வைத்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றிய தாலிபான்கள், அந்நாட்டு மக்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். தாலிபான்கள் நாட்டை கைப்பற்றிய உடனே அங்கிருந்து லட்சக்கணக்கான மக்கள் வெளியேறிவிட்டனர். அப்போது, நடந்த சம்பவம் அனைவரையும் பதைபதைக்க வைத்தது. ஒரு பக்கம் குண்டுவெடிப்பில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். மறுபக்கம் மக்களை வறுமை வாட்டி வருகிறது.
இந்நிலையில், ஆப்கன் தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய ஒருவர் வறுமையின் காரணமாக தற்போது தெருவோரத்தில் சமோசா உள்ளிட்ட உணவுப் பண்டங்களை விற்பனை செய்து வருகிறார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டது.
இது குறித்து ஆப்கனின் முன்னாள் அரசுப் பணியாளரான கபீர் ஹக்மால் தனது ட்விட்டர் பக்கத்தில், "தாலிபான் ஆட்சியில் ஒரு பத்திரிகையாளரின் வாழ்க்கை. மூஸா முகமதி பல ஆண்டுகளாக பல்வேறு ஆப்கன் தொலைக்காட்சி நிறுவனங்களில் செய்தியாளராக, செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய அனுபவம் பெற்றவர். ஆனால் இப்போது அவருக்கு வேலை இல்லை. வருமானம் இல்லை. குடும்பத்தைக் காப்பாற்ற உணவுப் பண்டங்களை விற்பனை செய்கிறார். ஆப்கானிஸ்தானில் ஜனநாயக அரசு வீழ்ந்த பின்னர் மக்கள் வறுமையில் வாடுகின்றனர்" என்று வேதனையுடன் கூறியுள்ளார்.