கரோனாவுக்கு எதிராக போராடி வரும் நிலையில் புதிய நோய்: வடகொரியா மக்கள் பீதி


ஏற்கனவே கரோனா தொற்று பரவி வரும் நிலையில், தற்போது கூடுதலாக குடல் தொற்று நோய் பரவத் தொடங்கியுள்ளதாக வடகொரிய அரசு அறிவித்துள்ளது.

நாட்டின் தென்கிழக்கு ஹெஜு நகரில் உள்ள விவசாயப்பகுதிகளில் மக்கள் கடுமையான குடல் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக வடகொரிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே உணவுப் பற்றாக்குறை மற்றும் கோவிட்-19 நோய்த்தொற்றின் பாதிப்பை எதிர்த்துப் போராடிவரும் வடகொரியாவில் தற்போது புதிய தொற்றுநோய் பரவுவதாக வெளிவரும் தகவல்கள் மக்களிடம் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், கடுமையான குடல் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உதவுவதற்காக மேற்கு துறைமுக நகரமான ஹேஜுவுக்கு நேற்று மருந்துகளை அனுப்பி வைத்தார். "தற்போது பரவும் தொற்றுநோய் பரவலை முற்றிலும் தடுக்க, சந்தேகத்திற்கிடமாக பாதிக்கப்பட்ட நபர்களை தனிமைப்படுத்தி தொற்றுநோய் பரிசோதனை மற்றும் அறிவியல் சோதனைகள் செய்வதன் மூலம் பாதிப்பினை உறுதிப்படுத்தி தொற்றுநோயைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை அதிபர் வலியுறுத்தினார்" என்று அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

காலரா அல்லது டைபாய்டு என சந்தேகிக்கப்படும் இந்த தொற்றுநோய் குறித்து கண்காணித்து வருவதாக கொரிய நாடுகளுக்கிடையேயான விவகாரங்களைக் கையாளும் தென் கொரியாவின் ஒருங்கிணைப்பு அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

"டைபாய்டு மற்றும் ஷிகெல்லோசிஸ் போன்ற குடல் நோய்கள் வட கொரியாவிற்கு புதியவை அல்ல. ஆனால் கவலைக்குரியது என்னவென்றால் நாடு ஏற்கனவே கரோனாவுக்கு எதிராக போராடி வரும் நேரத்தில் இந்த தொற்றுநோய் வந்துள்ளது" என்று ஹன்யாங் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியின் பேராசிரியர் ஷின் யங் ஜியோன் கூறினார்

கோவிட் நோயாளிகள் என்று குறிப்பிடாமல் காய்ச்சல் என்று மட்டுமே குறிப்பிட்டு தினசரி பாதிப்புகளை வடகொரியா அறிவித்து வருகிறது. இதன்படி இன்று மேலும் 26,010 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர், காய்ச்சலால் 73 பேர் உயிரிழந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பரவுவதாக சொல்லப்படும் குடல் தொற்றுநோய் குறித்த முழுமையான நோயின் விவரமோ அல்லது நோயாளிகளின் எண்ணிக்கை குறித்த தகவல்களையோ வடகொரிய அரசு வெளிப்படுத்தவில்லை.

x