மகாராஷ்ட்டிராவில் 5 மடங்கு கூடுதலாக பணம் வழங்கிய ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்க மக்கள் கூட்டம் முண்டியடித்த சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு ஏடிஎம்மில் இருந்து 500 ரூபாய் எடுக்க முயன்ற ஒருவருக்கு இன்ப அதிர்ச்சி ஏற்பட்டது. அவர் 500 ரூபாய் பணத்தை ஏடிஎம்மில் பதிவு செய்தபிறகு அவருக்கு 2500 ரூபாய் பணம் வந்தது. அவர் மீண்டும் 500 ரூபாய் எடுக்க முயன்றபோது மீண்டும் 2,500 ரூபாய் வந்தது.
நாக்பூர் நகரத்திலிருந்து 30 கிமீ தொலைவில் உள்ள கபர்கெடா நகரில் உள்ள ஒரு தனியார் வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தில் 5 மடங்கு அதிகமாக பணம் வந்த செய்தி காட்டுத்தீ போல் பரவியது. சிறிது நேரத்திலேயே பணம் எடுக்க இந்த ஏடிஎம் மையத்திற்கு வெளியே ஏராளமானோர் திரண்டனர்.
இது தொடர்பாக ஒரு வங்கி வாடிக்கையாளர் உள்ளூர் போலீஸாருக்கு தகவல் கொடுத்ததைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காவல்துறையினர் ஏடிஎம் மையத்தை மூடிவிட்டு வங்கிக்கு தகவல் கொடுத்தனர்.
இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள வங்கி அதிகாரி, 100 ரூபாய் நோட்டுகளை வைக்கும் ஏடிஎம் ட்ரேயில் ரூ.500 ரூபாய் நோட்டுகள் தவறாக வைக்கப்பட்டிருந்ததாக தெரிவித்தார். எனவே ரூ.100க்கு பதிலாக ரூ.500 ரூபாய் நோட்டுகள் விநியோகிக்கப்பட்டன என்றும் கூறினார்.