மின்னல் வேகத்தில் வந்த ரேஸ் பைக்... பறிபோன தலைமையாசிரியரின் உயிர்: 17 வயது சிறுவனால் நடந்த சோகம்


வாகனம் ஓட்டுவதற்கான உரிமம் இல்லாத சிறுவன் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மோதியதில், தனது ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்க வந்த தலைமையாசிரியர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தை அடுத்த தென்னூரில் வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு தனது ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிப்பதற்காக அரசுப்பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றி வந்த ராஜூ (55) என்பவர் நேற்று தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக பந்தயத்துக்கு பயன்படுத்தப்படும் விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தில் 17 வயது சிறுவன் ஒருவன் அதிவேகமாக வந்துகொண்டிருந்தான். எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த அந்த இரு சக்கர வாகனம் தலைமையாசிரியரின் இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியுள்ளது.

இதில், தூக்கி வீசப்பட்ட தலைமையாசிரியர் ராஜூ படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக தகவல் தெரிந்து வந்த போலீஸார், ராஜூ உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

x