தேர்தலுக்குத் தயாராகும் காஷ்மீர்: தீவிரமடையும் வாக்காளர் பட்டியல் தயாரிப்புப் பணி!


காஷ்மீரில் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்திருக்கின்றன. ஒன்றியப் பிரதேசம் எனும் முறையில் முதல் சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கவிருக்கிறது ஜம்மு - காஷ்மீர். தொகுதி மறுவரையறைப் பணிகள் முடிவடைந்துவிட்ட நிலையில், வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் பணிகள் தொடங்கியிருக்கின்றன. இப்பணி ஆகஸ்ட் 31-ல் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக, தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர் அனூப் சந்திர பாண்டே ஆகியோர் ஆய்வு நடத்தியதுடன், மறுவரை செய்யப்பட்டிருக்கும் தொகுதிகளை இறுதிசெய்யுமாறு ஜம்மு - காஷ்மீர் தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட்டிருக்கின்றனர்.

காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டக்கூறு ரத்து செய்யப்படுவதாக, 2019 ஆகஸ்ட் 5-ல் நாடாளுமன்றத்தில் மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தார். ஜம்மு - காஷ்மீர், லடாக் என இரண்டு ஒன்றியப் பிரதேசங்களாகக் காஷ்மீர் பிரிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, ஜம்மு - காஷ்மீர் தொகுதி மறுவரையறை ஆணையத்தை, 2020 மார்ச் 6-ல் மத்திய அரசு அமைத்தது. உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சனா தேசாய் தலைமையிலான இந்த ஆணையத்தில் தேசிய மாநாட்டுக் கட்சி எம்.பி-க்களான ஃபரூக் அப்துல்லா, முகமது அக்பர் லோன், ஹஸ்னைன் மஸூதி ஆகியோருடன், ஜம்மு பகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜகவைச் சேர்ந்த ஜிதேந்திர சிங், ஜுகல் கிஷோர் சர்மா ஆகிய இருவர் இடம்பெற்றிருக்கிறார்கள். தொகுதி மறுவரையறை செய்யும் பணிகள் 2021 ஜூன் முதல் வாரத்திலிருந்து தொடங்கின. மே 5-ல் இக்குழுவின் இறுதி அறிக்கை வெளியானது. அதன்படி சட்டப்பேரவையில் ஜம்மு பகுதியைச் சேர்ந்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 37-லிருந்து 43 ஆக உயர்கிறது. காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 46-லிருந்து 47 ஆகிறது.

வாக்காளர் பட்டியலைத் தயாரிக்கும் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் நியமனம் தொடர்பான உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டிருப்பதாக, பிடிஐ செய்தி நிறுவனத்திடம் காஷ்மீர் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

தொகுதி மறுவரையைத் தொடர்ந்து, வாக்குச் சாவடிகளுக்கான இடத்தைத் தீர்மானிப்பது உள்ளிட்ட பணிகள் ஜூன் 30-ல் முடிவடையும். புதிய வாக்குச் சாவடிகளை உருவாக்கும் பணிகளும் இறுதிசெய்யப்படும்.

வாக்குச் சாவடி அதிகாரிகளை நியமிப்பது, அவர்களுக்குப் பயிற்சியளிப்பது உள்ளிட்ட பணிகள் ஜூல 5-ல் நிறைவடையும். வாக்குச் சாவடிகளைச் சரிபார்ப்பது உள்ளிட்ட பணிகள் ஜூலை 25-ல் முடிவடையவிருக்கின்றன. வாக்காளர் பட்டியல் ஆகஸ்ட் 31-ல் இறுதிசெய்யப்படும் என்றும் காஷ்மீர் தேர்தல் அலுவலர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

x