காவல் நிலையத்தில் உயிரிழந்த விசாரணை கைதி ராஜசேகரின் முதற்கட்ட பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. இது குறித்து வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அன்பு விளக்கம் அளித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், அலமாதியை சேர்ந்த அப்பு என்கிற ராஜசேகர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடுங்கையூர் காவல்நிலையத்தில் விசாரணையின் போது மர்மமான முறையில் உயிரிழந்தார். இது தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. போலீஸார் தாக்கியதால்தான் ராஜசேகர் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டி உடலை வாங்க மறுத்துவரும் நிலையில், பிரேத பரிசோதனையின் முதற்கட்ட அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது. அந்த அறிக்கையில் கை, கால்களில் நான்கு இடங்களில் காயங்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அன்பு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "முதற்கட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள காயங்கள் காவல்துறை அவரைக் கைது செய்வதற்கு முன்பே ஏற்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையில் உயிரிழப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு அந்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. ஆனால் காவல்துறையினர் ஞாயிற்றுக்கிழமை காலைதான் அவரை கைது செய்தனர். அன்று மாலை அவர் உயிரிழந்துவிட்டார். எனவே காவல்துறையினர் அவரை தாக்கவில்லை என்பது இதன் மூலம் தெரியவருகிறது. இந்த காயங்களால் அவர் உயிரிழக்கவில்லை. அதே நேரத்தில் அவரது உயிரிழப்புக்கு மாரடைப்புதான் காரணம் என மருத்துவர்கள் தங்களிடம் தெரிவிக்கவில்லை. முழுமையான உடற்கூறு ஆய்வு அறிக்கை வந்த பின்னரே உண்மை தெரியவரும்" என்றார்.
இதன் பின்னர் வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அன்புவிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:
காவல் நிலையங்களில் விசாரணைக் கைதி மரணங்கள் தொடர்வதால் தான், ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் சிசிடிவி வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த சம்பவத்தை பொறுத்தவரையில் கைது செய்யப்பட்ட ராஜசேகரை இறுதிவரை காவல் நிலையத்திற்கு அழைத்து வராமல் சிசிடிவி கேமரா இல்லாத புறக்காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தது ஏன்?
உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் ஓய்வு கொடுத்த அங்கு தங்க வைக்கப்பட்டார்.
அதேபோல உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறும் போலீஸார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதும் பின்னர் அவருக்கு சிகிச்சை அளித்துவிட்டு மீண்டும் காவல்துறை விசாரணை நடத்தியதும் ஏன்?.
அருகில் இருந்தது தனியார் மருத்துவமனை என்பதனால்தான் அவசரத்திற்காக அங்கு அழைத்துச் சென்றோம். சிகிச்சை அளிக்கும்போது அவர் நல்ல நிலையில் இருந்ததால்தான் மீண்டும் விசாரணை நடத்தினோம். அதேபோல் இந்த சம்பவத்தை மறைக்க அவரது குடும்பத்தினருக்கு பணம் கொடுக்க பேரம் பேசப்பட்டதாக கூறும் குற்றச்சாட்டுகள் எல்லாம் உண்மைக்கு புறம்பானது. இந்த சம்பவத்தை தொடர்ந்து சென்னை காவல் துறையில் உள்ள தனிப்படை காவலர்களை அழைத்து அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. குற்ற வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை கையாள்வது தொடர்பாக டிஜிபி வெளியிட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.