செஸ் ஒலிம்பியாட்டிற்கு வரும் வெளிநாட்டு தலைவர்களுக்காக மாமல்லபுரத்தில் ஹெலிபேடு!


செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு வரும் வெளிநாட்டுத் தலைவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மாமல்லபுரம் பகுதியில் ஹெலிபேடு அமைப்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டியைச் சிறப்பாக நடத்துவதற்கு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என 23 பேர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர். சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியைச் சிறப்பாக நடத்திடும் வகையில் கூடுதல் நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக மாமல்லபுரத்தில் தீவிர ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இரண்டு வாரம் நடைபெறும் இந்த நிகழ்விற்கு பல்வேறு நாடுகளிலிருந்தும் பல முக்கியத் தலைவர்கள் மாமல்லபுரம் வர உள்ளனர். இவர்களது பாதுகாப்பு கருதி அந்நாட்டு ராணுவ அதிகாரிகள் அதிக தூரம் தரைவழி பயணத்தைத் தவிர்க்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் சென்னை விமான நிலையம் மற்றும் தாம்பரம் விமானப்படைத் தளங்களிலிருந்து ஹெலிகாப்டர் மூலமாக மாமல்லபுரம் வந்தடைவதற்கான முன்னேற்பாடு பணிகளை அதிகாரிகள் ஆய்வு கொண்டு வருகிறார்கள்.

விமான நிலையத்திலிருந்து மாமல்லபுரத்திற்கு ஹெலிகாப்டர் வான்வழி தடங்கள் மற்றும் இறங்கு தள வசதிகள் குறித்து செங்கல்பட்டு சார்- ஆட்சியர் சஜ்ஜீவனா, டிஎஸ்பி ஜெகதீஸ்வரன் உள்ளிட்டோர் திருவிடந்தை, கோவளம், பூஞ்சேரி ஆகிய பகுதிகளில் இன்று ஆய்வு செய்தனர். கோவளம், திருவிடந்தை, பூஞ்சேரி ஆகிய பகுதிகளில் ஏற்கெனவே உள்ள ஹெலிபேடுகளை பயன்படுத்த வாய்ப்பு இருப்பதாக வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

x