தருமபுரம் ஆதீனம் கல்லூரியின் பவள விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு ஆதீனம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக இன்று மயிலாடுதுறை வந்திருந்த தமிழக சுற்றுசூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், தருமபுரம் ஆதீனத்திற்கும் சென்றார். அவருக்கு ஆதீன நிர்வாகம் சார்பில் பூர்ணகும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. தருமை ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை சந்தித்து அமைச்சர் மெய்யநாதன் ஆசி பெற்றார்.
அப்போது ஆதீனம் கல்லூரி விழாவில் கலந்து கொள்ள அழைத்து விடுப்பு முதல்வருக்கு அழைப்பு விடுத்து ஆதீனம் சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டது. ஆதீனத்துக்குச் சொந்தமான கலைக்கல்லூரியின் பவளவிழா நிறைவு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடக்க உள்ளது. அதில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க விருப்பம் தெரிவித்தும், அழைப்பு விடுத்தும் கல்லூரி நிர்வாகம் சார்பில் கடிதத்தை அமைச்சர் மெய்யநாதனிடம் ஆதீனகர்த்தர் வழங்கினர். அதனை முதல்வரிடம் சேர்ப்பிப்பதாக அமைச்சர் உறுதியளித்தார். அமைச்சருடன் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதாமுருகன், அரசு வழக்கறிஞர் ராமசேயோன் உட்பட பலரும் உடன் சென்றனர்.