அதிமுக ஆட்சியில் எல்இடி பல்பு வாங்கியதில் ஒரு கோடி ஊழல்: 11 பேர் மீது பாய்ந்தது வழக்கு!


எல்இடி பல்புகள் வாங்கியதில் ஒரு கோடி ரூபாய் வரை ஊழல் நடந்திருப்பதாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவின் பேரில் 11 பேர் மீது லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி, தென்கரை, வீரபாண்டி, கே.புதுபட்டி, உத்தமபாளையம், கோம்பை, மேலசொக்கநாதபுரம், பூதிப்புரம், தேவதானப்பட்டி, ஒடைப்பட்டி ஆகிய பேரூராட்சிகளில் 2019-2020-ல் 1,300 எல்இடி பல்ப்கள் வாங்கியதில் ஒரு கோடி ரூபாய் வரை ஊழல் நடந்திருப்பதாக தேனியைச் சேர்ந்த சரவணன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடுத்திருந்தார்.

அவரது மனுவில், 'ஒரு பல்ப் ரூ. 9987-க்கு வாங்கப்பட்டுள்ளது. அதன் விலை அதிகபட்சமாக ரூ. 2500 மட்டுமே இருக்கும். ஆனால், ரூ. 7487 கூடுதலாக கணக்கு காட்டி ஒரு கோடி ரூபாய் வரை மோசடி நடந்துள்ளது' என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய தேனி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவு பிறப்பித்தது.

இதன் பேரில், தேனி மாவட்ட டவுன் பஞ்சாயத்து முன்னாள் உதவி இயக்குநர் விஜயலட்சுமி மற்றும் டவுன் பஞ்சாயத்து முன்னாள் செயல் அலுவலர்கள் ஆண்டிபட்டி பாலசுப்பிரமணியன், தென்கரை மகேஸ்வரன், வீரபாண்டி செந்தில்குமார், கே.புதுபட்டி ஆண்டவர், உத்தமபாளையம் பாலசுப்பிரமணி, கோம்பை ஜெயலட்சுமி, மேலசொக்கநாதபுரம் மணிகண்டன், பூதிப்புரம் கார்த்திகேயன், தேவதானப்பட்டி கணேசன், ஒடைப்பட்டி பசீர் அகமது ஆகிய 11 பேர் மீதும், கே. புதுப்பட்டியைச் சேர்ந்த ஜமுனா, ரவி ஆகிய கான்ராக்டர்கள் மீதும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் லஞ்ச ஒழிப்புத் துறை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

x