இனி பிளாஸ்டிக் சர்ஜரி தேவையில்லை... ஆட்டின் காது போதும்!


கொல்கத்தாவில் உள்ள கே.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்களும், விலங்கு மற்றும் மீனள அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகளும் இணைந்து மருத்துவ உலகில் ஒரு முக்கியமான சாதனையைச் செய்திருக்கிறார்கள்.

மைக்ரோடியா எனப்படும் சிறிய காது பாதிப்பு, பிளவுண்ட உதடுகள், விபத்தால் உடல் பாகங்களில் ஏற்படும் சிதைவுகள் போன்றவற்றுக்குச் சிகிச்சையளிக்க ஆட்டுக் காதின் குருத்தெலும்பைப் பயன்படுத்தியிருக்கும் அவர்கள், அந்த முயற்சியில் வெற்றியடைந்திருக்கிறார்கள். குறிப்பாக, குறைந்த செலவில் இந்த சிகிச்சை முறைகளை மேற்கொள்ள முடியும் எனும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறார்கள். இந்தக் குழுவில் சிறப்பு மருத்துவர்கள், நோயெதிர்ப்பு நிபுணர்கள் உள்ளிட்டோரும் இடம்பெற்றிருக்கிறார்கள்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.ஜி. கார் மருத்துவக் கல்லூரியின் பிளாஸ்டிக் சர்ஜரி துறையின் தலைவர் டாக்டர் ரூப் நாராயண் பட்டாச்சார்யா, “பொதுவாக பிளவுண்ட உதடுகள், மைக்ரோடியா போன்ற குறைபாடுகளைக் களைய பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய வேண்டியிருக்கும். அது அதிகச் செலவு பிடிக்கும் விஷயம் மட்டுமல்ல, மிகவும் கடினமான சிகிச்சையும் கூட. அதுமட்டுமல்ல, உடல் பாகங்களில் பொருத்தப்படும் பிளாஸ்டிக் மற்றும் சிலிக்கான் பொருட்களை, நீண்ட நாட்களுக்கு மனித உடல் ஏற்றுக்கொள்ளாமல் போவதும் உண்டு. அந்த வகையில் இந்த சிகிச்சை முக்கியத்துவம் வாய்ந்தது” என்று கூறியிருக்கிறார்.

எப்படி சாத்தியமானது?

பிளாஸ்டிக் மற்றும் சிலிக்கான் பொருட்களுக்கு மாற்றாக, மனித உடலுக்குப் பொருந்தக்கூடிய வகையிலான, எளிதில் கிடைக்கக்கூடிய பொருளுக்கான தேடலில் 2013-ம் ஆண்டு முதல் ஈடுபட்டுவருவதாக கால்நடை மருத்துவர் ஷமித் நந்தி, நுண்ணுயிரியலாளர் டாக்டர் சித்தார்த் ஜோர்தர் ஆகியோர் கூறியிருக்கிறார்கள். ஆட்டின் காது எதற்கும் பயன்படாது எனத் தூக்கியெறியப்படும் பொருள் என்பதால், அதை வைத்து சோதனை முயற்சியில் இறங்கியதாக கால்நடை மருத்துவர் ஷமித் நந்தி தெரிவித்திருக்கிறார்.

இந்த ஆய்வு குறித்து மேலும் பேசிய ஷமித் நந்தி, “ஆட்டின் காதிலிருந்து குருத்தெலும்பு நீக்கப்பட்டு, பல்வேறு ரசாயன முறைகள் மூலம் அதன் நோயெதிர்ப்பு சக்தியைச் செயலிழக்கச் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சோதனையின் முடிவில், குருத்தெலும்பின் செல் தன்மை மட்டுமே நீங்கியிருந்தது. அதன் கட்டமைப்பும் தரமும் மாறாமல் அப்படியே இருந்தன” எனத் தெரிவித்திருக்கிறார்.

சோதனை அத்துடன் நின்றுவிடவில்லை. ஆட்டுக் காதின் குருத்தெலும்பை மனித உடல் ஏற்றுக்கொள்ளுமா எனும் சந்தேகம் ஆய்வாளர்களுக்கு இருந்தது. இதையடுத்து, விலங்குகளின் உடலில் இதுகுறித்த பரிசோதனை நடத்தப்பட்ட பின்னர், ஆர்.ஜி.கார் மருத்துவமனையில் மேற்கண்ட குறைபாடுகளுக்குச் சிகிச்சை பெற்றுவந்த 25 நோயாளிகளின் உடல் பாகங்களில் அதைப் பொருத்திப் பார்க்க முடிவெடுத்தனர். இந்த சிகிச்சைக்குப் பின்னர் அவர்களிடம் நல்ல முன்னேற்றம் தெரிந்ததாகவும் மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர்.

“இது தொடர்பான திட்ட அறிக்கையை மத்திய உயிரி தொழில்நுட்பவியல் அமைச்சகத்துக்கு அனுப்பினோம். அவர்கள் எங்கள் பணியைப் பாராட்டினர்” என்று கூறிய டாக்டர் ரூப் நாராயண் பட்டாச்சார்யா, இன்னும் மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு இந்த ஆராய்ச்சியைத் தொடரவிருப்பதாகவும், ஆட்டுக் காதின் குருத்தெலும்பைப் பயன்படுத்தி தீக்காயங்களுக்கும், தொழுநோய் காயங்களுக்கும் சிகிச்சையளிக்க முடியுமா என ஆய்வுசெய்யவிருப்பதாகவும் தெரிவித்தார்.

x