சென்னையில் கரோனா பாதித்தவர்கள் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
கரோனா பாதிப்பு சென்னையில் மீண்டும் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. இதைத் தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் கரோனாவைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை மாநகராட்சியில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி, சுகாதாரத்துறை செயலாளர் செந்தில் குமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதன் பின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், " சென்னையில் கரோனா பரவல் அதிகரித்து வருவதால் பரிசோதனை மற்றும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த அறிவுறுத்தி உள்ளோம். தொற்று பாதித்தவர்களை வீடு, வீடாகச் சென்று கண்காணிக்கவும் வெளியில் வராமல் இருக்கவும் அறிவுறுத்த வேண்டும். வீட்டில் தனிமையில் உள்ளவர்கள் வெளியே வராமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது" என்றார்.
மேலும் " 3 மண்டல ஆணையர் கட்டுப்பாட்டில் தலா 50 படுக்கைகள் வீதம் 150 படுக்கைகள் கொண்ட கரோனா கண்காணிப்பு மையம் அமைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. நாளை முதல் கரோனா பரிசோதனையை 5 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டப்பட வேண்டும் என்று சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று கூறினார்.