மத்திய பிரதேச மாநிலத்தில் முழுமையாக மதுவிலக்கு அமல்படுத்தக் கோரி போராடிவரும் பாஜக மூத்த தலைவர் உமா பாரதி, அவ்வப்போது மதுக் கடைகள் மீது தாக்குதல் நடத்திப் பரபரப்பை ஏற்படுத்துவது உண்டு. அந்த வகையில், நேற்று (ஜூன் 14) அம்மாநிலத்தின் நிவாரி மாவட்டத்தின் ஓர்ச்சா நகரில் உள்ள ஒரு மதுக்கடை மீது மாட்டுச் சாணத்தை எறிந்து தனது எதிர்ப்பை அவர் பதிவுசெய்திருக்கிறார்.
இந்தக் காட்சிகள் அடங்கிய காணொலியை நேற்று இரவு ட்விட்டரில் பகிர்ந்த உமா பாரதி, அனுமதி வாங்காமல் அந்த இடத்தில் மதுக் கடை செயல்படுவதாகக் குற்றம்சாட்டியிருக்கிறார். மாநிலத் தலைநகர் போபாலிலிருந்து 330 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஓர்ச்சா நகரில், புகழ்பெற்ற ராம் ராஜா கோயில் அமைந்திருக்கிறது. புனித நகரான ஓர்ச்சாவில் அப்படி ஒரு கடை நடத்தப்படுவதே குற்றம்தான் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
எனினும், அனுமதிக்கப்பட்ட இடத்தில்தான் மதுக்கடை இயங்கிவருகிறது என அம்மாநிலக் காவல் துறையினர் தெரிவித்திருக்கின்றனர். சாணம் வீசப்பட்டதும் அந்தக் கடை தற்காலிகமாக மூடப்பட்டது.
மார்ச் மாதம் போபாலில் உள்ள ஒரு மதுக் கடை மீது கற்களை எறிந்து அவர் போராட்டம் நடத்தியிருந்தார். இந்த முறை சாணத்துடன் நிறுத்திக்கொண்டதை அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
“பாருங்கள், நான் சாணத்தைத்தான் வீசினேன். கற்களை அல்ல” என்றும் அந்தக் காணொலியில் அவர் கூறியிருக்கிறார்.
வீட்டிலேயே ‘பார்’!
பாஜக ஆளும் மாநிலங்களில் ஒன்றான மத்திய பிரதேசத்தில் மது விற்பனைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. நடப்பு நிதியாண்டில் கொண்டுவரப்பட்ட புதிய கலால் வரிக் கொள்கை மூலம் வீட்டிலேயே மதுபானக் கூடம் அமைத்துக்கொள்ள சிவராஜ் சிங் சவுஹான் தலைமையிலான பாஜக அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. அதாவது, ஒரு கோடி ரூபாய் ஆண்டு வருமானம் உள்ளவர்கள், உரிமத் தொகையாக ஆண்டுக்கு 50,000 ரூபாய் கட்டி வீட்டிலேயே பார் வைத்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கூடவே, மதுபான சில்லறை விற்பனை விலையில் 20 சதவீதம் குறைக்கப்பட்டிருக்கிறது. மாநிலத்தின் அனைத்து விமான நிலையங்களிலும் வெளிநாட்டு மதுபானங்கள் விற்கப்படும்; மதுபானங்களை இறக்குமதி செய்யும் செயல்முறை எளிமைப்படுத்தப்படும் என்று பல்வேறு அறிவிப்புகளும் புதிய கலால் வரிக் கொள்கையில் இடம்பெற்றிருக்கின்றன. ஏப்ரல் 1 முதல் இவை அமலுக்கு வந்துவிட்டன.
மறுபுறம், அதே பாஜகவைச் சேர்ந்த உமா பாரதி மதுவுக்கு எதிராகத் தொடர்ந்து போராடிவருவது குறிப்பிடத்தக்கது.