மின்னல் வேகத்தில் பாய்ந்து வந்த யானை... வேட்டைக்காவலருக்கு நடந்த துயரம்: பதைபதைக்கும் வீடியோ காட்சி


கோவையில் ஊருக்குள் புகுந்த காட்டு யானை ஒன்று வேட்டை தடுப்பு காவலர் ஒருவரை கீழே போட்டு காலால் மிதிக்கும் பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

கோவை மாவட்டம், தீத்திப்பாளையம் பகுதிக்குள் 6 காட்டு யானைகள் கூட்டமாக நேற்று முன்தினம் வந்தது. இதில் ஒரு பெண் யானை மட்டும் ஊருக்குள் புகுந்தது. இதனால் பொது மக்கள் அச்சமடைந்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வனத்துறையினர் விரைந்து வந்தனர். அவர்கள், ஜீப், ஜேசிபி எந்திரங்கள் மூலம் அலாரம் எழுப்பியும், பட்டாசு வெடித்தும் யானைகளை காட்டிற்குள் விரட்ட தீவிர முயற்சி மேற்கொண்டனர்.

இதில் வேட்டை தடுப்பு காவலர் நாகராஜ் என்பவர் யானையை பின்னாடி விரட்டிச் சென்றுள்ளார். அப்போது, திடீரென யானை, நாகராஜை நோக்கி திரும்பியது. மின்னல் வேகத்தில் பாய்ந்து வந்த யானை நாகராஜை கீழே போட்டு காலால் மிதித்தது. தூரத்தில் இருந்தவர்கள் அலறியதோடு, யானையை விரட்ட முயன்றனர்.

ஒரு கட்டத்தில் யானை, நாகராஜை விட்டு ஓடிச் சென்றது. யானை மிதித்ததில் படுகாயம் அடைந்த அவர், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது, அவர் வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். இரண்டு நாட்களுக்கு பிறகு வேட்டை தடுப்பு காவலரை தாக்கும் பதைபதைக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

x