எம்.ஜி.எம் குழும நிறுவனங்களுக்குச் சொந்தமான 40 இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ளது எம்.ஜி.எம் டிஸ்ஸி வேல்ட் பொழுது போக்கு பூங்கா. சென்னை மக்களின் பொழுது போக்கு தளங்களில் மிகவும் முக்கியமான ஒன்றாக எம்.ஜி.எம் உள்ளது. இந்த நிறுவனத்தின் சார்பாக நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனம் வருமான வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரின் அடிப்படையில் இன்று காலை முதல் எம்.ஜி.எம். நிறுவனத்திற்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.
சென்னை, பெங்களூரு, நெல்லை, திண்டிவனம், காஞ்சிபுரம் உள்ளிட்ட சுமார் 40க்கும் மேற்பட்ட எம்.ஜி.எம். நிறுவனத்திற்கு தொடர்புடைய அலுவலகம் மற்றும் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகிறார்கள். 40க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனைகள் நடைபெறுவதால் அந்த நிறுவனம் சார்பாக நட்சத்திர ஹோட்டல்களை வாங்கியதில் வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக வருமான வரித்துறையினருக்கு வந்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகின்றன.