‘இது தேர்தல் தந்திரம் இல்லையா?’ - மோடியைச் சாடும் மாயாவதி!


18 மாதங்களில் 10 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குமாறு, அரசின் பல்வேறு துறைகளுக்குப் பிரதமர் மோடி உத்தரவிட்டிருக்கும் நிலையில், மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக இதைச் செய்வது தேர்தல் தந்திரம் இல்லையா என பகுஜன் சமாஜ் கட்சி தலைவரும், உத்தர பிரதேச முன்னாள் முதல்வருமான மாயாவதி கேள்வி எழுப்பியிருக்கிறார்.

அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் மனிதவள மேம்பாட்டுத் துறை நிலவரங்களை ஆராய்ந்த பிரதமர் மோடி 18 மாதங்களில் 10 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குமாறு உத்தரவிட்டிருப்பதாகவும், தீவிரமான செயல்திட்டமாக இதை முன்னெடுக்குமாறு கேட்டுக்கொண்டிருப்பதாகவும் பிரதமர் அலுவலகம் இன்று ட்வீட் செய்திருக்கிறது.

இந்நிலையில் இது தொடர்பாக இந்தியில் ட்வீட் செய்திருக்கும் மாயாவதி, ‘மத்திய அரசின் தவறான கொள்கைகள் மற்றும் செயல்படும் பாணி ஆகியவற்றின் காரணமாக வறுமை, பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை, ரூபாய் மதிப்பில் சரிவு போன்றவை இதற்கு முன் இல்லாத அளவுக்கு அதிகரித்திருக்கின்றன. இதனால் மக்கள் அனைவரும் கவலையும் பதற்றமுமாக இருக்கிறார்கள். இந்தச் சூழலில், அடுத்த ஒன்றரை ஆண்டுகளில், குறிப்பாக மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக, 10 லட்சம் வேலைவாய்ப்புகள் நிரப்பப்படும் என அறிவித்திருக்கிறது. இது தேர்தல் தந்திரம் இல்லையா?’ என்று அதில் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

பட்டியலினச் சமூகத்தினர், பழங்குடிகள், இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் பணிகள் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருப்பதாகவும் மாயாவதி குற்றம்சாட்டியிருக்கிறார். ‘சிறப்பு நடவடிக்கையின் மூலம் இந்தக் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும் என்று நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் பகுஜன் சமாஜ் கட்சி வலியுறுத்திவருகிறது. அரசு இவ்விஷயத்தில் மெளனம் காக்கிறது. இதனால், வேலைவாய்ப்பின்மை, வறுமை என இந்தச் சமூகங்களைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்’ என தனது ட்வீட்டில் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

x