‘அடுத்த முப்படைத் தலைமைத் தளபதி விரைவில் நியமிக்கப்படுவார்!’ - ராஜ்நாத் சிங் தகவல்


இந்தியாவின் முப்படைத் தலைமைத் தளபதியாகப் பதவி வகித்த பிபின் ராவத் கடந்த ஆண்டு நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த நிலையில், அடுத்து அந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படப்போவது யார் எனும் கேள்வி தொடர்ந்து முன்வைக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில் அடுத்த முப்படைத் தலைமைத் தளபதி விரைவில் நியமிக்கப்படுவார் எனப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று தெரிவித்திருக்கிறார்.

அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் முப்படைகளுக்கும் பொதுவான தலைவர் எனும் பதவி உண்டு. இந்தியாவில் இந்தப் பதவி உருவாக்கப்பட்டது 2019-ல்தான். 1999-ல் நடந்த கார்கில் போரைத் தொடர்ந்து, நாட்டின் பாதுகாப்பு அமைப்பில் இருக்கும் இடைவெளிகளை நிரப்புவது குறித்து ஆராய ஒரு உயர் மட்டக் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் பரிந்துரையின் பேரில் முப்படைகளின் தலைமைத் தளபதி எனும் புதிய பதவி உருவாக்கப்பட்டது. முப்படைகளுக்குமான ஒற்றைத் தலைவர் எனு அடிப்படையில் பாதுகாப்புத் துறை அமைச்சருக்கு நேரடியாக ஆலோசனை வழங்கும் வகையில் அந்தப் பதவி உருவாக்கப்பட்டது.

பெருமைக்குரிய அந்தப் பதவி, தரைப் படைத் தளபதியாக இருந்த பிபின் ராவத்துக்குக் கிடைத்தது. 2020 ஜனவரி 1-ல் முப்படைகளின் தலைமைத் தளபதியாகப் பொறுப்பேற்று மிகச் சிறப்பாகப் பணியாற்றிவந்த அவர், 2021 டிசம்பர் 8-ல் குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்தார். அவருடன் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 13 பேரும் உயிரிழந்தனர்.

பிபின் ராவத்தின் மரணத்துக்குப் பின்னர் முப்படைத் தலைமைத் தளபதி பதவிக்கு யாரும் தேர்வுசெய்யப்படவில்லை. பிபின் ராவத்தின் இடத்தை நிரப்பப்போவது யார் என்று பல மாதங்களாக எதிர்பார்ப்பு நிலவிவந்த நிலையில், முப்படைத் தலைமைத் தளபதி நியமனத்துக்கான விதிமுறைகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. முப்படைகள் தொடர்பான சட்டங்களில் கொண்டுவரப்பட்ட அந்தத் திருத்தங்களின்படி, பணியில் இருக்கின்ற அல்லது ஓய்வுபெற்ற, 62 வயது பூர்த்தியாகாத லெப்டினன்ட் ஜெனரல், ஏர் மார்ஷல் அல்லது துணை அட்மிரல்கள் இந்தப் பதவிக்குத் தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, தரைப்படை, விமானப் படை, கடற்படை என மூன்று படைகளின் தளபதிகளும் இந்தப் பதவிக்குத் தகுதியானவர்கள். கூடவே, மூன்று நட்சத்திர அந்தஸ்து கொண்ட அதிகாரிகளும் முப்படைத் தலைமைத் தளபதி பதவியில் அமர தகுதி பெற்றிருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து, அந்தப் பதவி விரைவில் நிரப்பப்படும் எனும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

இந்நிலையில், ‘அக்னிபத்’ எனும் பெயரில் தொடங்கப்பட்டிருக்கும் திட்டத்தில் ராணுவ வீரர்களைப் பணிநியமனம் செய்வது தொடர்பாக இன்று டெல்லியில் நடந்த கூட்டத்தில் பேசும்போது இதுகுறித்த முக்கியத் தகவலை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். முப்படைகளின் தளபதிகளும் கலந்துகொண்ட இந்தக் கூட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்நாத் சிங், “முப்படைகளின் தலைமைத் தளபதி நியமனம் விரைவில் நடைபெறும். அதற்கான பணிகள் நடைபெற்றுவருகின்றன” என்று தெரிவித்தார்.

x