நாடு முழுவதிலும் சட்டக்கல்வியின் பாடங்களாகப் பிராந்திய மொழிகளை அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது, மாணவர்களுக்கு இதர மாநிலங்களின் நீதிமன்றங்களில் வழக்காடுபவர்களுக்கு மிகவும் பலன் உள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக 12 பேர் கொண்ட குழுவை மத்தியக் கல்லூரி மானியக் குழு (யூஜிசி) அமைத்திருக்கிறது.
இந்தத் திட்டம் குறித்து விவாதிக்க நேற்று டெல்லியில் யூஜிசி-யின் தலைவர் எம்.ஜெக்தீஷ்குமார் தலைமையில் கூட்டம் நடந்தது. இதில், இந்திய பார் கவுன்சில்(பிசிஐ) தலைவர் மனன் குமார் மிஸ்ரா, இந்திய மொழிகள் குழுவின் தலைவர் சாமு கிருஷ்ண சாஸ்திரி ஆகியோரும் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் நாடு முழுவதிலும் உள்ள சட்டக்கல்விப் பாடங்களில் 12 பிராந்திய மொழிகளை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது.
மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை 2020-ன்படி, பிராந்திய மொழிகளிலும் தொழிற்கல்வி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன் அடிப்படையில் சட்டக்கல்வியிலும் பிராந்திய மொழிகளில் ஒன்றைப் பாடமாக அறிமுகப்படுவதால் பலன் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன. இந்தத் திட்டத்தை, யுஜிசி-யுடன் பிசிஐ மற்றும் மத்திய மொழிகள் குழுவும் இணைந்து அறிமுகப்படுத்த உள்ளன.
இதன் தலைவராக உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே நியமிக்கப்பட்டுள்ளார். இதன் உறுப்பினர்களாக பிசிஐ-யின் மனன் மிஸ்ரா, யூஜிசி-யின் ஜெக்தீஷ்குமார் மற்றும் மொழிகள் குழுவின் சாமு கிருஷ்ண சாஸ்திரி உள்ளிட்ட 12 பேரும் உள்ளனர். சட்டக்கல்வியில் பிராந்திய மொழிகள் அறிமுகத்தால் வழக்கறிஞர்களும் நீதிபதிகளும் ஆங்கிலம் அல்லாமல் கூடுதலாக இரண்டு மொழிகளை அறிந்துகொள்ளும் வாய்ப்புகள் உள்ளன. இந்த 12 பிராந்திய மொழிகளில் தமிழ், இந்தி, பஞ்சாபி, அசாமிய மொழி, குஜராத்தி, தெலுங்கு, உருது, மராத்தி, வங்க மொழி, கன்னடம், ஒடியா மற்றும் மலையாளம் ஆகியவை இடம்பெற உள்ளன.
இதன் மூலம், ஆங்கிலத்திலான பாடநூல்கள் பலவும் பிராந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்படும் வாய்ப்பும் உள்ளது. சட்டக்கல்வியின் அறிமுகத்திற்குப் பின் பொறியியல் கல்வியிலும் பிராந்திய மொழிகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இதன்மூலம், தமிழகத்தில் தமிழ் படித்தவர்களுக்குப் பேராசிரியர் பணிகள் கிடைக்கும் வாய்ப்பு அதிகரிக்கும் எனக் கருதப்படுகிறது. அடுத்த கல்வியாண்டில் இந்த முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.