உ.பி. கூட்ட நெரிசல் உயிரிழப்புகள் முதல் ராகுல் கருத்துகள் நீக்கம் வரை | டாப் 10  விரைவுச் செய்திகள்


> உ.பி. ஆன்மிக கூட்ட நெரிசல் பலி அதிகரிப்பு: உத்தரப் பிரதேசத்தின் ஹாத்தரஸ் மாவட்டத்தின் சிக்கந்தராரா-வில் நாராயண் சாகர் விஷ்வ ஹரி போலே பாபா என்பவரின் பிரார்த்தனை கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் பக்தர்கள் வெளியேறும்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 107 பேர் உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்பது தெரிய வந்துள்ளது. இந்த பரிதாபச் சம்பவத்தில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்த நிலையில், பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

இது குறித்து உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வெளியிட்ட பதிவில், “ஹாத்தரஸ் மாவட்டத்தில் நடந்த துரதிர்ஷ்டவசமான விபத்தில் ஏற்பட்ட உயிர் இழப்பு மிகவும் சோகமானது; இதயத்தைத் துன்புறுத்துகிறது. அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், போர்க்கால அடிப்படையில் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொள்ளவும், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

> “மும்மடங்கு வேகம் காட்டுவோம்!” - பிரதமர் மோடி பதிலுரை: ஊழலுக்கு எதிரான கொள்கை காரணமாகத்தான் நாடு தங்களை மீண்டும் ஆசீர்வதித்துள்ளதாக நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். மேலும், “எங்களின் 3-வது முறை ஆட்சி என்பது 3 மடங்கு வேகத்தில் வேலை செய்யும்” என்று அவர் உறுதியளித்தார்.

குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி ஆற்றிய பதிலுரையில், “வளர்ந்த இந்தியா என்ற கனவை நிறைவேற்ற நமது நேரத்தின் ஒவ்வொரு நொடியையும், நமது உடலின் ஒவ்வொரு துகளையும் அர்ப்பணிப்போம். வளர்ந்த இந்தியாவை கட்டியெழுப்பும் தீர்மானத்தை நிறைவேற்ற எந்த ஒரு வாய்ப்பையும் விடமாட்டோம் என்று எனது நாட்டு மக்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன்.

ஒவ்வொரு துறையையும், ஒவ்வொரு வெற்றியையும் புதிய உயரத்திற்கு கொண்டு செல்வோம். 10 ஆண்டுகளில் இந்தியாவை உலகின் 5-வது பெரிய பொருளாதாரமாக மாற்றினோம். இப்போது, ​​நாம் முன்னேறி வரும் வேகம் விரைவில் நம் நாட்டை உலகின் 3-வது பெரிய பொருளாதாரமாக பிரகாசிக்கச் செய்யும். எங்களின் 3-வது முறை ஆட்சி என்பது 3 மடங்கு வேகத்தில் வேலை செய்வோம் என்பதாகும். எங்கள் 3-வது பதவிக்காலம் என்பது 3 மடங்கு சக்தியை புகுத்துவோம் என்பதாகும். எங்கள் 3-வது தவணை என்றால் 3 மடங்கு முடிவுகளைக் கொண்டு வருவோம் என்பதாகும்” என்று பேசினார்.

மேலும், ஊழலுக்கு எதிரான கொள்கை காரணமாகத்தான் நாடு தங்களை மீண்டும் ஆசிர்வதித்துள்ளதாக பேசிய பிரதமர் மோடி, தேர்தலில் காங்கிரஸ் 100-ஐ தாண்டாதது தொடர்ந்து மூன்றாவது முறையாகும் என்று குறிப்பிட்டார்.

> மீனவர் பிரச்சினை: மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்: தமிழகத்தைச் சேர்ந்த 25 மீனவர்கள் பாக் ஜலசந்தி - மன்னார் வளைகுடா கடல்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நிலையில், நேற்று (ஜூலை 1) இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர். இந்நிலையில், “தமிழக மீனவர்கள் எதிர்நோக்கும் இன்னல்களுக்கு நிரந்தரத் தீர்வு காண்பது காலத்தின் கட்டாயமாகும். தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளை நிலைநாட்டும் வகையில், மீனவர்களுக்குத் தொடர்ந்து இடையூறு விளைவித்து வரும் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணத் தேவையான, உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று வெளியுறவுத் துறை அமைச்சருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

> மெட்ரோ வசதிகள் - தமிழக அரசு உறுதி: இரண்டாவது கட்டமாக, கட்டப்படும் சென்னை மெட்ரோ ரயில் நிலையங்கள் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் அனைத்து வசதிகளுடன் அமைக்கப்படும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது.

> என்டிஏ எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை: நாடாளுமன்ற விதிகள், நாடாளுமன்ற ஜனநாயக முறை மற்றும் நடத்தை ஆகியவற்றைப் பின்பற்றுமாறும், ஒரு நல்ல எம்பியாக உருவாக இவை முக்கியம் என்றும் என்டிஏ எம்.பி.க்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை வழங்கியுள்ளதாக நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.

> அவைக்குறிப்பில் இருந்து ராகுல் காந்தியின் கருத்துகள் நீக்கம்: மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, திங்கட்கிழமை அன்று அவையில் பல்வேறு கருத்துகளை முன்வைத்து பேசினார். இதனால், ஆளும் பாஜக மற்றும் ராகுல் காந்தி இடையே கடும் வாக்குவாதம் எழுந்தது. இந்தச் சூழலில் அவர் தெரிவித்த கருத்துகள் சில அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

“சிறுபான்மையின மக்களுக்கு பாஜக அநீதி செய்கிறது; தொழிலதிபர்கள் அதானி மற்றும் அம்பானி குறித்த விமர்சனம்; நீட் தேர்வு பணம் படைத்த மாணவர்களுக்கானதே தவிர, சிறந்த மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கானது அல்ல; அக்னி பாதை திட்டம் பிரதமர் அலுவலகத்தின் திட்டம் முதலான ராகுல் காந்தியின் கருத்துகள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கி சபாநாயகர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

> சபாநாயகருக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்: தனது கருத்துகள் நீக்கப்பட்டது தொடர்பாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எழுதியுள்ள கடிதத்தில், “குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான எனது உரையின் குறிப்பிட்ட பகுதியை நீங்கள் நீக்கி இருக்கிறீர்கள். அவை நடைமுறைப்படி அவ்வாறு நீக்குவதற்கு சபாநாயகருக்கு அதிகாரம் இருக்கிறது.

ஆனால், மக்களவை நடைமுறை மற்றும் நடத்தை விதிகளின் விதி 380 இல் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்ட உரைகளை மட்டும்தான் நீக்க முடியும். ஆனால், எனது உரையின் கணிசமான பகுதிகளை, இந்த விதியின் கீழ் நீக்கியிருப்பது கண்டு அதிர்ச்சியடைகிறேன். எனது கருத்துக்களை பதிவுகளிலிருந்து நீக்குவது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் கோட்பாடுகளுக்கு எதிரானது. எனவெ, எனது உரையின் நீக்கப்பட்ட பகுதியை மீண்டும் சேர்க்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

> “மோடி உலகில்...” - ராகுல் காந்தி கடும் விமர்சனம்: “பிரதமர் மோடியின் உலகில் உண்மையை அழிக்கலாம். அதனை மூடி மறைக்கலாம். ஆனால், எதார்த்த உலகில் அப்படி அல்ல. உண்மையை ஒருபோதும் அழிக்க முடியாது. எதைச் சொல்ல வேண்டுமென நான் நினைத்தேனோ அதைத் தான் சொன்னேன். அது தான் உண்மையும் கூட. அவர்களுக்கு வேண்டிய வரையில் எதை வேண்டுமானாலும் அழிக்கலாம். ஆனால், உண்மை உண்மை தான்” என ராகுல் காட்டமாக கருத்து தெரிவித்தார்.

> கென்ய மக்கள் போராட்டத்தில் 39 பேர் பலி, 360 பேர் காயம்: ஆப்பிரிக்க நாடான கென்யாவில் புதிய வரி உயர்வை எதிர்த்து மக்கள் போராடி வருகின்றனர். இந்தப் போராட்டத்தை தடுக்கும் வகையில் அந்த நாட்டு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தப் போராட்டத்தில் 39 பேர் இதுவரை உயிரிழந்தனர். மேலும், 360-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதனை கென்யாவின் தேசிய மனித உரிமைகள் ஆணையம் உறுதி செய்துள்ளது.

> ராகுல் திராவிட் பிரியாவிடை: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பணியை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார் ராகுல் திராவிட். அவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்றுள்ளது. அதோடு ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டி மற்றும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதியிலும் விளையாடி உள்ளது.

அவரது பயிற்சியாளர் பணி அண்மையில் முடிந்த டி20 உலகக் கோப்பை தொடருடன் நிறைவடைந்துள்ளது. இந்தச் சூழலில் இந்திய அணி வீரர்களிடம் அவர் கூறுகையில், “நவம்பரில் உலகக் கோப்பை இறுதியில் தோல்வியை தழுவிய பிறகு எனக்கு போன் செய்து பணியில் தொடருமாறு சொன்ன ரோகித்துக்கு இந்நேரத்தில் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் ஒவ்வொருவருடனும் இணைந்து பணியாற்றியதை எனது பாக்கியமாக கருதுகிறேன். அது எனக்கு மகிழ்ச்சியும் கூட” என்றார்.